பசு பாதுகாவலர்கள் சங்கத்தை தடை செய்யக்கோரி வழக்கு! பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

பசுக்களைப் பாதுகாக்கும் சங்கங்களை சட்ட விரோதமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Supreme Court


உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், பசு கடத்தலுக்குத் தடை விதித்தார். இதையடுத்து, மாட்டிறைச்சி தொடர்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்  பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ராஜஸ்தானில் பசு மாடுகளை ஏற்றிவந்த ஹெய்லிகான் என்பவரை பசு காவலர்கள் கடுமையாகத் தாக்கினார்கள். இதில் ஹெய்லிகான் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பசுக்களைப் பாதுகாப்போர் சங்கங்களை சட்ட விரோதம் என அறிவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. பசுக்களைப் பாதுகாக்கும் சங்கத்தினர், வன்முறையில் ஈடுபடுவதால், அவற்றை சட்டவிரோதம் என்று அறிவிக்க மனுவில் கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இது தொடர்பாக விரிவாக விளக்கம் அளிக்க,  ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், ஹெய்லிகான் வழக்கு தொடர்பாக  மூன்று வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநிலத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணை வரும் மே 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!