உத்தரப்பிரதேசத்தில் பசுக்கன்றுக்கு நேர்ந்த கொடுமை! | Hindu Yuva Vahini convenor's car hits a calf

வெளியிடப்பட்ட நேரம்: 14:11 (07/04/2017)

கடைசி தொடர்பு:14:11 (07/04/2017)

உத்தரப்பிரதேசத்தில் பசுக்கன்றுக்கு நேர்ந்த கொடுமை!

உத்தரப்பிரதேசத்தில், ஹிந்து யுவ வாஹினி அமைப்பைச் சேர்ந்த அகந்த் பிரதாப் சிங், மது போதையில் பசுக் கன்றை காரில் இடித்துக் கொலைசெய்துள்ளார். முதலமைச்சர் ஆதித்யநாத்தின் பசுக்களின் காவல் அமைப்பைச் சேர்ந்தவரே பசுக் கன்றை இடித்துவிட்டு தப்பிச் சென்றிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

யோகி

உ.பி-யில் ஆட்சியமைத்த பா.ஜ.க., பசு வதை புரிவோருக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்துவந்தது. சட்ட விரோத இறைச்சிக்கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என அந்த மாநில முதல்வர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், ஆதித்யநாத்தின் அமைப்பான, 'ஹிந்து யுவ வாஹினி' -யைச் சேர்ந்த அகந்த் பிரதாப் சிங்கின் கார், ஒரு பசுக் கன்றை ஏற்றிக் கொன்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உ.பி., நிவதா பகுதியைச் சேர்ந்த ராஜ்ரானி என்பவரின் பசுக் கன்றை, மது போதையில் சிலர் இடித்துவிட்டு தப்பிச் சென்றதாக அவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள், அவர்கள் விட்டுச்சென்ற காரை அடித்து நொறுக்கினர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மதுக்கடையும் அடைக்கப்பட்டது. இந்த நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. இதுகுறித்து, பிரதாப் சிங் தரப்பில் அவர் தங்கை ப்ரியங்கா சிங்,' பிரதாப் சிங் ஊரில் இல்லை என்றும், காரை வேறு யாராவது ஒட்டிச் சென்றிருக்கலாம்' என்றும் கூறியுள்ளார்.

உ.பி.யில் பசு பாதுகாப்பை வலியுறுத்தி வரும் முதல்வர் ஆதித்தியநாத்தின் அமைப்பைச் சேர்ந்தவர்களே பசு வதையில் ஈடுபட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை சார்பில் நடுநிலையான விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.