ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை காலிசெய்த விஜயபாஸ்கர்: தேர்தல் ஆணையம் அடுக்கும் ஆதாரங்கள்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 12-ம் தேதி நடைபெற இருந்தது. ஆளும்கட்சி சார்பில் ஒரு ஓட்டுக்கு 4 ஆயிரம் வீதம் 85 சதவிகித வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது எனச் செய்திகள் வெளியாயின. இதைத் தொடர்ந்து, வருமான வரித்துறை திடீர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தியது. அவரது வீட்டில் சிக்கியதாக சில ஆவணங்கள் வெளியானது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறை சார்பில் ரகசிய அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடமும் அறிக்கை கேட்டது தேர்தல் ஆணையம். இந்த நிலையில் 12-ம் தேதி நடக்க இருந்த இடைத்தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்துசெய்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக, 29 பக்க அறிக்கையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்:

RK Nagar

சென்னையில் 21 இடங்களிலும் சென்னையைத் தாண்டி 11 இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரது வீடுகள் இந்தச் சோதனையில் முக்கியமான இடங்கள் ஆகும். 12- ம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்காக, விஜயபாஸ்கர் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா  நடக்கிறது என்று வருமான வரித்துறைக்கு தகவல் வந்துகொண்டிருந்தது. அமைச்சர் விஜயபாஸ்கரின் அக்கவுன்டென்ட் சீனிவாசனிடமிருந்து சில தாள்கள் பறிமுதல்செய்யப்பட்டது. அதில், 89 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா தொடர்பாக தகவல் இருந்தது. சிட்லபாக்கம் ராஜேந்திரன் சில வாகனங்கள்மூலம் பணப் பட்டுவாடா  செய்துள்ளார். 

விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் 5 கோடி ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியது. எம்எல்ஏ-க்கள் விடுதியில் விஜயபாஸ்கருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில், பணப்பட்டுவாடா எப்படி எல்லாம் நடத்த வேண்டும். வார்டு , பூத் வாரியான புள்ளி விவரங்கள், 89 கோடி ரூபாயை யார் யாரெல்லாம் செலவுசெய்ய வேண்டும் என்ற விவரம், அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்தது. அ.தி.மு.க, தி.மு.க என்று வாக்காளர்களைப் பிரித்து, பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் கிடைத்தன. மேலும், வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பது தொடர்பான நிறைய ஆவணங்களும் வருமான வரி சோதனையில் கிடைத்தன.

 

 

Election Commission team

தேர்தல் அதிகாரிகளால் ஆர்.கே.நகரில் ரூ.31.91 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. 74 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பரிசுப் பொருட்கள் கொடுத்ததாக, 8 முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது. 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முதல் தேர்தல் பார்வையாளர், "பணப்பட்டுவாடா, பரிசு பொருள்கள் சப்ளை, சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் எல்லாம் தேர்தல் நடத்தைகளையே சவால்விடும் வகையில் இருந்தது'' என்று கூறியுள்ளார்.

இரண்டாவது, தேர்தல் பார்வையாளர் கொடுத்துள்ள அறிக்கையில், ''ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர்கள், மூத்த தலைவர்களே முன்னின்று பணம் சப்ளைசெய்ததாக, கட்டுபாட்டு அறைக்கு நிறைய புகார்கள் வந்தன. அந்தப் புகார்கள், வருமான வரித்துறையோடு பகிர்ந்துகொள்ளப்பட்டது" என்று கூறியுள்ளார்.

VijayaBaskar

இதையெல்லாம் தேர்தல் ஆணையம் உன்னிப்பாகக் கவனித்தது. மேலும், இது தொடர்பாக ஏற்கெனவே வந்துள்ள நீதிமன்றத் தீர்ப்புகளையும் ஆய்வுசெய்தோம். இவை எல்லாவற்றின் அடிப்படையில், அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தேர்தல் அட்டவணை முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது. தேர்தல் நியாயமாக நடத்தும் வகையில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும்'' என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எஸ்.முத்துகிருஷ்ணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!