வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (13/06/2012)

கடைசி தொடர்பு:11:27 (13/06/2012)

ஜனாதிபதி தேர்தல்: பிரணாப்பும் மற்றும் சிலரும்...!

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரேஸில் நிதியமைசசர் பிரணாப்  முகர்ஜி முன்னிலையில் உள்ளபோதிலும்,வேறு சிலரது பெயர்களையும் காங்கிரஸ்  பரிசீலித்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப்பை நிறுத்தினால் மட்டுமே அனைத்துக்கட்சிகளின்  ஆதரவை கோர முடியும் என்பதாலேயே, அவரை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக  நிறுத்த காங்கிரஸ் தீர்மானித்தது.

இருப்பினும் பிரணாப்பை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தும்பட்சத்தில்,அவர் வகித்து வந்த  நிதியமைச்சர் பதவி மற்றும் பல்வேறு அமைச்சர்கள் குழுவுக்கான தலைவர் பதவி,  மக்களவையின் அவைத்தலைவர் பதவி போன்றவற்றை திறம்பட சமாளிக்க யாரை  போடுவது என்ற குழப்பத்தில் காங்கிரஸ் ஆழ்ந்துள்ளது.

இதனாலேயே ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட பின்னரும் கூட, வேறு  சிலரது பெயர்களையும் காங்கிரஸ் மேலிடம் பரிசீலித்துவருகிறது.

பிரணாப்புக்கு மாற்றாக மூத்த தலைவரான கரண் சிங்கை நிறுத்த காங்கிரஸ்  விரும்பியதாகவும்,ஆனால் அதனை இந்திய் கம்யூனிஸ்ட் கட்சியும்,சரத் பவாரின்  தேசியவாத காங்கிரஸ் கட்சியும் நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பெயரை  முன்வைத்தபோது,அதனை இடதுசாரிகள் மற்றும் முலாயம் ஆகியோர்  நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுனரும், மகாத்மா காந்தியின் பேரனுமான  கோபால் காந்தியை  நிறுத்தினால் என்ன? என்று மம்தா யோசனை கூறியதாகவும்,ஆனால் அதற்கு  இடதுசாரிகள் மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியிலேயே ஆதரவு கிடைக்காது  என்பதால்,அந்த யோசனை ஆரமபத்திலேயே நிராகரிக்கப்பட்டதாகவும் காங்கிரஸ்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில்,மாற்று வேட்பாளர் பட்டியலில் மக்களவை முன்னாள் சபாநாயாகர்  சோம்நாத் சாட்டர்ஜியின் பெயரும் உள்ளது.சோம்நாத் சாட்டர்ஜிக்கு மம்தா மட்டுமல்லாது  இதர கட்சிகள் கூட ஆதரவளித்தாலும்,இடதுசாரிகள் ஆதரவளிக்க மாட்டார்கள் என்பதால்  அது குறித்து யோசிக்க வேண்டியது இருப்பதாக அவ்வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, கூட்டணி கட்சியான திரிணாமூல்  காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தாவை இன்று அழைத்துப் பேசுகிறார் காங்கிரஸ் தலைவர்  சோனியா காந்தி.அதனைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்  யாதவும் சோனியாவை சந்தித்துப் பேச உள்ளார்.

இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி வேட்பாளர் ஏறக்குறைய இறுதி செய்யப்பட்டுவிடும்  என்றும்,ஒருவேளை கடைசி நேரத்தில் பிரணாப்புக்குப் பதிலாக வேறு ஒரு பெயர்  அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள்  கூறுவதால்,ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் இன்னமும் சஸ்பென்ஸ் நீடிக்கத்தான்  செய்கிறது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்