வெளியிடப்பட்ட நேரம்: 12:27 (10/04/2017)

கடைசி தொடர்பு:13:27 (10/04/2017)

கைவிட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு..! ஆத்திரத்தில், 88 ஆண்டு கால ’கேசிநேனி டிராவல்ஸ்’ மூடல்

தென்னிந்தியாவின் மிகப்பெரிய தனியார் டிராவல்ஸ் நிறுவனமான ‘கேசிநேனி டிராவல்ஸ்’, கடந்த சனிக்கிழமையுடன் மூடப்பட்டது. ஆந்திர எம்பி ஒருவருக்குச் சொந்தமான இந்த நிறுவனம், அந்த மாநிலப் போக்குவரத்துத்துறை அதிகாரியுடன் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக, இந்த முடிவை எடுத்துள்ளது.

kesineni


தென்னிந்தியாவின் மிகப்பெரிய ‘கேசிநேனி டிராவல்ஸ்’ நிறுவனத்துக்கு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு எனக் கிளைகள் உள்ளன. அவை, அத்தனை மாநிலங்களிலும் மூடப்பட்டன. ஒரு வாரத்துக்கு முன்னரே பயணம் செய்வதற்கான புக்கிங் நிறுத்தப்பட்டது. முன்னரே புக்கிங் செய்தவர்களுக்குப் பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டது. ஆந்திர போக்குவரத்து அதிகாரி ஒருவருடன் ஏற்பட்ட பிரச்னையால்தான், 88 ஆண்டு கால 170 ஆடம்பரப் பேருந்துகளைக்கொண்ட இந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது.

தெலுங்கு தேசக் கட்சியின் எம்பி கேசிநேனி ஸ்ரீநிவாஸ். இவருக்குச் சொந்தமான கேசிநேனி டிராவல்ஸ் நிறுவனம் பல மோசடிகளிலும் முறையற்ற செயல்களிலும் ஈடுபட்டுவருவதாக, ஆந்திரப் போக்குவரத்துத்துறை கமிஷனர் பாலசுப்ரமணியம் குற்றம் சாட்டினார். இதனால்,  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உதவியை நாடிய கேசிநேனிக்கு, சரியான பதில் கிடைக்காததாலும், கமிஷனரிடம் எம்பி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறப்பட்டதாலும் ஆத்திரமடைந்த கேசிநேனி, தன் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

கேசிநேனி டிராவல்ஸ் சில காலமாகவே நஷ்டத்தில் ஓடுவதால், இதை நிறுத்திவிட்டு மாற்றுத் தொழிலில் ஈடுபடவே எம்பி. ஸ்ரீநிவாஸ் கேசிநேனி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.