வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (10/04/2017)

கடைசி தொடர்பு:18:42 (10/04/2017)

இறந்தது தன் கணவர் என்று தெரியாமல் செய்தி வாசித்த நியூஸ் ரீடர்! #Video

செய்தியாளர் பணி சவால் நிறைந்தது. மழை, வெயில், புயல் என்று பாராமல் உழைக்க வேண்டும். ஆபத்து நிறைந்தது. குறிப்பாக புகைப்படக் கலைஞர்களின் பணி சவாலானது. கோவையில் 4 அடுக்கு மாடிக் கட்டடம் ஒன்று மண்ணுக்குள் அப்படியே புதைந்தது. இரவு நேரத்தில் மழையும் கொட்டுகிறது. 15 பேருக்கு மேல் பலியாகினர். ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியிருந்தனர். மீட்புப் பணி நடந்து கொண்டிருந்தது. மக்கள் கோபத்துடனும் வேதனையுடனும் மீட்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பிளாஷ் அடித்தால், பார்வையிலேயே 'இவன்லாம் ஒரு மனுஷனா.. ' என்பது போல பார்த்தனர். 

கணவர் இறந்த செய்தி வாசித்த நியூஸ் ஆங்கர்

மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், பத்திரிகைக்கு புகைப்படங்கள் முக்கியம். சூழலைப் புரிந்து கொண்டு பின், நானும் மீட்புப் பணியில் ஈடுபட்டு, அவ்வப்போது கொஞ்சம் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டேன். இது போன்ற சூழலில் நாம் செயல்படும்விதம் நமக்கே நம் மீது கோபம் ஏற்படுத்தும். புகைப்படம் எடுப்பதா... அல்லது உதவிக்கு போவதா... என்ற குழப்பம் ஏற்படும். இதனாலேயே பல இடங்களில் புகைப்படக் கலைஞர்கள் மீது மக்கள் தாக்குதல் நடத்துவது உண்டு. 

இதே போன்ற ஒரு சூழல்தான் சுப்ரீத் கவுர் என்பவருக்கு ஏற்பட்டிருக்கிறது.  தனது கணவர் இறந்த செய்தியை தொலைக்காட்சியில் வாசித்து விட்டு, நியூஸ் முடிந்ததும் மனம் வெடித்து அழுதிருக்கிறார் சத்தீஸ்கரைச் சேர்ந்த பெண் நியூஸ் ரீடர். ராய்ப்பூரில் ஐபிசி24 என்ற சேனலில் சுப்ரீத் கவுர் என்பவர் செய்தி வாசிப்பாளராக பணிபுரிகிறார். கடந்த ஆண்டுதான் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. கணவரின் பெயர் ஹர்ஷத் கவாதே. இருவரும் ராய்ப்பூரில் வசித்து வந்தனர். 

கடந்த சனிக்கிழமை அதிகாலை நடந்த விபத்தில், கவாதே இறந்து போனார். காலை 10 மணி புல்லட்டினில் 'லைவ் நியூஸ்' காட்டப்பட்டுள்ளது. இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்  என ஸ்டூடியோவில் இருந்து சுப்ரீத் கவுர் வாசிக்க, தொடர்ந்து விபத்து நடந்த விதம் குறித்து செய்தியாளர் செய்தியை கூறத் தொடங்கியுள்ளார்.. அந்த செய்தியாளர் காரின் எண் சொன்ன போதுதான், சுப்ரீத் கவுருக்கு இறந்து போனது தனது கணவர் என்று தெரிய வந்துள்ளது. ஆனாலும் உடனடியாக அழுது கதறிவிடவில்லை. தொடர்ந்து 10 நிமிடங்கள் சுப்ரீத் கவுர் புல்லட்டின் வாசித்தார். புல்லட்டின் முடிந்த பின்னரே ஸ்டூடியோவில் கண்ணீர் விட்டு கதறியிருக்கிறார். அப்போதுதான் ஸ்டூடியோவில் இருந்த சிலருக்கு சுப்ரீத்தின் கணவர் இறந்து போயிருப்பது தெரிந்திருக்கிறது.  

 

 

கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து இந்த சேனலில் சுப்ரீத் கவூர் பணியாற்றி வருகிறார்.திருமணம் முடிந்த ஒரே ஆண்டில் கணவரை இழந்த சுப்ரீத் கவுரின் நிலை சேனல் ஊழியர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஐ.பி.சி சேனலின் ஆசிரியர் ரவிகாந்த் மிட்டல் கூறுகையில், ''நேரலையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தகவல்களைக் கேட்டு, செய்தி வழங்கிக் கொண்டிருந்தார் சுப்ரீத் கவுர்.  நிருபர் காரின் எண்ணைக் கூறிய ஒரு விநாடி சுப்ரீத் கவுரின் குரல் தடுமாறியது. எப்படியோ சமாளித்துக் கொண்டு தொடர்ந்து செய்தியைப் படிக்க ஆரம்பித்து விட்டார். செய்தி வாசித்து முடிந்ததும் வெளியே அழுதவாறு வெளியே ஓடி வந்தவர் அந்த செய்தியாளருக்கு போன் செய்து விவரம் கேட்டார். உறவினர்களுக்கும் போன் செய்து கணவர் இறந்த செய்தியை தெரிவித்தார்''  என்றார்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் மிகவும் பாப்புலரான செய்தி வாசிப்பாளர்  சுப்ரீத் கவுர்.. மிகவும் தைரியமான பெண் என சக ஊழியர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் சாதாரண பத்திரிகையில் இருந்து 'சிட்னி மார்னிங் ஹெரால்ட் ' பத்திரிகை வரை தற்போது சுப்ரீத் கவுர் செய்தியாகியிருக்கிறார். சட்டீஸ்கர் முதல்வர் ராமன்சிங், சுப்ரீத் கவுர் கணவர் இறந்தது குறித்தும், இந்தச் சம்பவத்தைக் குறித்தும் விசாரித்திருக்கிறார்.  

- எம்.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்