வெளியிடப்பட்ட நேரம்: 02:59 (11/04/2017)

கடைசி தொடர்பு:07:48 (11/04/2017)

முத்தலாக் முறைக்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!

இஸ்லாம் மதத்தில் மூன்று முறை 'தலாக்' எனக் கூறி விவாகரத்து செய்யும் வழக்கமுள்ளது. முத்தலாக் முறை பெண்களின் விருப்பத்துக்கு எதிராக இருப்பதாகவும், இஸ்லாமிய பெண்களின் உரிமையைப் பறிப்பதாகவும் பா.ஜ.க அரசின் சார்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், பிரதமர் மோடி உத்தரப்பிரதேச தேர்தல் சமயத்தில், பா.ஜ.க முத்தலாக் முறையை எதிர்ப்பதாகவும், முத்தலாக் முறையை ஒழிக்க முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் வாக்குறுதியளித்தார்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில், முத்தலாக் முறையானது சம உரிமைக்கு எதிராக இருப்பதாகவும், அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை எனவும் மத்திய அரசு சார்பாக எழுத்துபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறையால் இஸ்லாமியப் பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம், முத்தலாக் முறையானது இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும், இதில் அரசு தலையிடக் கூடாது எனவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த 5-ம் தேதி கான்பூரைச் சேர்ந்த அலியா சித்திக் என்பவர், தனது கணவர் விரைவு தபாலில் முத்தலாக் அனுப்பியுள்ளதாக மோடியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.  உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்திடமும் அவர் இதுபற்றி புகார் அளித்து இருந்தார். அவர், சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறும் தனக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.