வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (11/04/2017)

கடைசி தொடர்பு:11:53 (11/04/2017)

80 சதவீதம் பார்வை இல்லை.. கேட் தேர்வில் 98.55%..தன்னம்பிக்கை மாணவி!

80% பார்வைக் குறைபாடுடைய குஜராத் மாணவி கேட் தேர்வில் வென்று இந்தியாவின் மிக உயரிய கல்வி நிறுவனமான அகமதாபாத் ஐ.ஐ.ம்.-ல் படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ப்ராச்சி


குஜராத்தைச் சேர்ந்தவர் ப்ராச்சி சுக்வானி (21). அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ இறுதியாண்டு படித்து வருகிறார். விழித்திரை சிதைவு என்னும் ஒரு வகை மரபணு நோயினால் சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டவருக்கு 80% பார்வைக் குறைபாடு உள்ளது. இருந்தபோதிலும் தனது லட்சியத்தை ஒவ்வொரு முறையும் வென்று வருகிறார் ப்ராச்சி.

இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனமான ஐ.ஐ.எம்.- அகமதாபாத்தில் எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்ற கனவு தற்போது ப்ராச்சிக்கு நிறைவேறியுள்ளது. 2016-ம் ஆண்டு நடந்த கேட் தேர்வில், பார்வைக் குறைபாடு உடையவர்  பிரிவில் தேர்வெழுதி 98.55% மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். ப்ராச்சியின் சாதனையை அங்கீகரிக்கும் விதமாக இந்தியாவின் தலைசிறந்த மூன்று ஐ.ஐ.எம்.-களும் தங்கள் நிறுவனத்தில் படிக்க அழைப்பு விடுத்துள்ளனர். ப்ராச்சி அதிலிருந்து ஐ.ஐ.எம்.- அகமதாபாத்தினை தேர்வு செய்துள்ளார்.

ஒரு மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் முதலில் வேலைக்குச் சேர்ந்து அனுபவம் பெற்றபின் சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கூறும் ப்ராச்சிக்கு பார்வையற்றோருக்கான ஒரு தொண்டு நிறுவனம் தொடங்க வேண்டும் என்பதே நீண்ட நாள் கனவு எனக் கூறுகிறார்.

ப்ராச்சி போன்ற ஓர் தன்னம்பிக்கையும், விடாமுயற்சி நிறைந்த மாணவியை இதுவரை பார்த்ததேயில்லை என அவரது கல்லூரி பேராசிரியர்களும், சக மாணவர்களும் பாராட்டி வருகின்றனர்.