டெல்லி போராட்டத்தைக் கைவிட, பொன்னார் முன்வைக்கும் இரண்டு காரணங்கள்! | Pon.Radhkrishnan asks farmers to withdraw the protest at Delhi

வெளியிடப்பட்ட நேரம்: 22:41 (11/04/2017)

கடைசி தொடர்பு:22:40 (11/04/2017)

டெல்லி போராட்டத்தைக் கைவிட, பொன்னார் முன்வைக்கும் இரண்டு காரணங்கள்!

டெல்லியில் இன்று, 29-வது நாளாக தொடர் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளைச் சந்தித்த பின்னர், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய ராதாகிருஷ்ணன், 'விவசாய நலன்களுக்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்துவருகிறது. இப்போது, டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராடத்துக்குத் தீர்வு காணும் வகையில், சுமூகமான முயற்சியை நான் எடுத்துவருகிறேன். விவசாயிகள், தங்களது போராட்டத்தைக் கைவிடுமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்தும் வருகிறேன்.

இரண்டு முக்கியக் காரணங்களுக்காக இந்தப் போராட்டத்தை விவசாயிகள் கைவிட வேண்டும். ஒன்று, இந்த அரசின் மீது விவசாயிகள்  நம்பிக்கை வைக்க வேண்டும். விவசாயிகளின் நலன்களுக்காக சாதகமான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. இன்னொரு காரணம், டெல்லியில் நிலவும் சீதோஷ்ண நிலை, வெப்பம் மிக அதிகமாக உள்ளது. இந்த இரண்டு காரணங்களையும் பரிசீலித்து, விவசாயிகள் தொடர் போராட்டத்தைக் கைவிட வேண்டும்' என்று பேசினார்.