வெளியிடப்பட்ட நேரம்: 14:11 (12/04/2017)

கடைசி தொடர்பு:14:16 (12/04/2017)

டாடா, அதானிக்கு நிவாரணம் கிடையாது!- உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

Supreme court

டாடா மற்றும் அதானி நிறுவனங்களுக்குச் சொந்தமாக, குஜராத் மாநிலம் முந்தராவில் அனல் மின் நிலையங்கள் உள்ளன. இந்த அனல் மின்நிலையங்களில் பயன்படுத்தப்படும் நிலக்கரி, இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து இந்த நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் நிலக்கரியின் விலை உயர்த்தப்பட்டது. இதையடுத்து  இந்நிறுவனங்கள், இந்த விலையேற்றத்தை ஈடு செய்யும் வகையில் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் (Central Electricity Regulatory Commission) முறையிட்டன. இதில், இரு நிறுவனங்களுக்கும் சாதகமான முடிவு வந்தது. மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் (Appellate Tribunal of Electricity) மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவை ஆமோதித்தது.

ஆனால், நிவாரணம் கொடுக்க வேண்டிய மாநில அரசாங்கங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு இந்த விஷயத்தை எடுத்துச் சென்றன. உச்ச நீதிமன்றம், தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுமாறு கோரியது. மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் முன்னர் எடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்யச் சொல்லியது.

இதையடுத்து, நிவாரணத் தொகை அளவு மாற்றியமைக்கப்பட்டது. இதன் மூலம், அதானி பவர் நிறுவனத்துக்கு 3,000 கோடி ரூபாயும் டாடா பவருக்கு 2,700 கோடி ரூபாய் அளவுக்கும் நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த நிவாரணங்களை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.