வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (12/04/2017)

கடைசி தொடர்பு:10:30 (14/04/2017)

"புற்றுநோய் அபாயம்" : செல்போன் டவரை அகற்ற உத்தரவு!

செல்போன் டவர் கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படுத்துமா?

"செல்போன் டவர் காரணமாகத் தனக்குப் புற்றுநோய் ஏற்பட்டுவிட்டது, அந்த டவரை அகற்ற வேண்டும்" என்று குவாலியரைச் சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில், செல்போன் டவரை அகற்றும்படி பி.எஸ்.என்.எல்-நிறுவனத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்தவர் ஹரிஷ் சந்த் திவாரி. குவாலியரின் பிரகாஷ் ஷர்மா பகுதியில் பணியாற்றி வரும் இவர், கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், "தனக்கு 41 வயதாகிறது. தான் வேலை பார்க்கும் இடத்துக்கு அருகே எந்த அனுமதியுமின்றி, கடந்த 2002-ம் ஆண்டு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம், செல்போன் டவர் ஒன்றை நிறுவியது. அதிலிருந்து தினமும் உடல் நலத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் கதிர்வீச்சுகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. கடந்த 14 ஆண்டுகளாகச் செல்போன் கதிர்வீச்சால் நான் பாதிக்கப்பட்டு வந்துள்ளேன். பி.எஸ்.என்.எல் டவரில் இருந்து நான் வேலை செய்யும் இடம், 50 மீட்டர் தொலைவில்தான் உள்ளது. தற்போது, எனக்கு லைபோமா என்ற ஒருவகையான புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதற்கு, தொடர்ந்து கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆளானதே காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அந்த செல்போன் டவரை அகற்ற உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார். 

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் நவீன் சின்ஹா ஆகியோரைக் கொண்ட அமர்வு, குறிப்பிட்ட டவரில் இருந்து பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு எலக்ட்ரோ மேக்னடிக் கதிர்வீச்சு இருக்கிறதா என்று கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. தவிர, மனுதாரர் திவாரியையும் அவரது மருத்துவ ஆவணங்களைத் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

அதன்படி, திவாரி தன்னுடைய முழுமையான மருத்துவ ஆய்வு அறிக்கைகளைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக்கொண்ட சமூக ஆர்வலர்கள், 'காளான்கள் போலச் செல்போன் டவர்களை அருகருகே அமைப்பதால், பறவையினங்கள் அழிந்து வருகின்றன' என்ற புள்ளிவிவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அதேநேரத்தில், மத்திய தொலைத்தொடர்பு துறை தாக்கல் செய்த பதில் மனுவில், "நாடு முழுவதும் கோடிக்கணக்கான மொபைல் போன் சந்தாதாரர்கள் உள்ளனர். லட்சக்கணக்கான டவர்கள் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையான டவர்களில் மேற்கொண்ட ஆய்வில் மனுதாரர் குறிப்பிட்டதுபோன்ற பாதிப்பு ஏதும் இல்லை" என்று தெரிவித்துள்ளது.

அதேபோல், தனியார் செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. 'பொதுவாக மக்கள் மத்தியில் செல்போன் கதிர்வீச்சு பற்றிய பயம் இருந்தாலும், இதை நிரூபிப்பதற்கான எந்த ஒரு அறிவியல்பூர்வமான ஆய்வு முடிவுகளும் இதுவரை வெளியாகவில்லை. அதுபோல், செல்போன் டவரில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் புற்றுநோய் ஏற்படும் என்றோ, காகம், சிட்டுக்குருவி போன்ற பறவை இனங்கள் அழிவதற்கான சான்றுகளோ இல்லை' என்று அந்த சங்கம் தெரிவித்தது. இந்த வழக்கு கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தது.

சிட்டுக்குருவி

இந்நிலையில், வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "குறிப்பிட்ட அந்தச் செல்போன் டவரை ஒரு வாரத்துக்குள் செயலிழப்புச் செய்ய வேண்டும்" என்று பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளனர். 

புற்றுநோயை ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில், குறிப்பிட்ட ஒரு செல்போன் டவரை செயலிழப்பு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, செல்போன் நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் செல்போன் டவர் ஒன்றை அகற்றும்படி உச்ச நீதிமன்றம், உத்தரவிட்டிருப்பதும் இதுவே முதல்முறை. இதேபோன்று ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் உள்ள செல்போன் டவர்களை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினால்,என்னாவது என்ற அச்சத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளன. 

இந்தியாவில் மக்கள் தொகை அதிகம்... அதற்கு ஏற்ப செல்போன் பயன்பாடும் அதிகமாக உள்ளது. இதனால், வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த, நெட்வொர்க் கவரேஜ் முழுமையாகக் கிடைக்க செல்போன் டவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தும், அதில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் வகையிலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அமைத்து வருவதாகப் பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. டவர்களின் கதிர்வீச்சு அளவைக் குறைக்க வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

செல்போன் கதிர்வீச்சால் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் வருமா என்று மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, "செல்போன் டவர்களின் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு காரணமாக, புற்றுநோய் ஏற்படும் என்பதற்கு உறுதியான ஆய்வு முடிவுகள் ஏதும் இல்லை. இருப்பினும், கதிர்வீச்சுக் காரணமாக நம் உடலில் உள்ள திசுக்களில் ஏற்படும் மாற்றங்களினால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இதை ஆய்வு மூலம் கண்டறிந்து உறுதி செய்யப் பல ஆண்டுகள் ஆகும். அதுவரை, உறுதியாக எதையும் குறிப்பிட முடியாது" என்றார். 

நவீன தொழில்நுட்பம், விஞ்ஞான வளர்ச்சி என்று ஒருபுறம் நமக்கு நாமே மார்தட்டிக் கொண்டாலும், அவற்றின் மூலம் ஏற்படும் இதுபோன்ற விளைவுகளையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதை மறுக்கமுடியாது. அதேநேரத்தில், மனிதன் மற்றும் மற்ற உயிரினங்களுக்கு இதனால் ஆபத்து நேராதவகையில் மாற்று வழிகளை கண்டறிய வேண்டியதும் அவசியம்!

- பா.பிரவீன் குமார்


டிரெண்டிங் @ விகடன்