வெளியிடப்பட்ட நேரம்: 17:54 (12/04/2017)

கடைசி தொடர்பு:17:59 (12/04/2017)

மாணவர்கள் போராட்டத்தை வன்முறையால் கலைத்த காவல்துறை

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் திடீர் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. நிர்வாகத்துக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பியதை அடுத்து தடியடி நடத்தியுள்ளது காவல்துறை.

சண்டிகரில் பஞ்சாப் பல்கலைக்கழத்தில் மாணவர்களின் கல்விக் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டது. இளங்கலை படிப்புக்கான கட்டணம் 2200 லிருந்து 10 ஆயிரமாகவும், சட்டப் படிப்புகளுக்கான கட்டணம் 4000 லிருந்து 20 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது. இதையடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராகவும், மத்திய அரசின் கல்விக் கொள்கைகளுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும், துணைவேந்தர் அருண்குமார் குரோவரின் அலுவலகத்துக்கு எதிரில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாணவர்களை காவல் துறை கலைந்து போக வற்புறுத்தியது. எனினும் மாணவர்கள் துணைவேந்தரை பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இறுதியில் மாணவர்களைக் கலைந்து போகச் செய்ய காவல்துறை வஜ்ரா வாகனங்களை பயன்படுத்தி தண்ணீரை அடித்தனர். இதையடுத்து சிலர் காவலர்கள் மீது கற்கள் வீசித் தாக்கினர். போராட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதைக் தடுக்க காவல்துறை இறுதியில் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் மாணவர்களைக் கலைத்தது. வன்முறைச் சம்பவத்தில் பல மாணவர்களும் காவலர்களும் காயமடைந்துள்ளனர். சம்பவத்தைப் பதிவு செய்து கொண்டிருந்த ஊடகத்தினரும் தாக்குதலில் தப்பவில்லை. இந்தச் சம்பவத்தால் பஞ்சாப் பல்கலைக்கழக வட்டாரத்தில் பதற்றம் நிலவுகிறது.