வீட்டுக்குள் புகுந்து காதலர்களை மிரட்டிய ஆதித்யநாத் அமைப்பினர்

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத்தின் ஹிந்து யுவ வாஹினி அமைப்பினர், வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த காதலர்களை கேள்வி கேட்டு மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது. காதலென்ற பெயரில் மதமாற்றம் நடைபெறுவதைத் தடுக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹிந்துத்துவா அமைப்பினர் கூறியுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு தினமும் சர்ச்சைகள் குறையாவண்ணம் வந்து கொண்டிருக்கின்றன. இறைச்சிக் கூடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு போராட்டங்கள், இந்து அமைப்பின் தலைவர் பசுவை தனது காரால் இடித்துக் கொன்ற விவகாரம் என தொடர் குற்றச்சாட்டுகளை சந்தித்துவரும் ஆதித்யநாத் அரசுக்கு அடுத்த சோதனையாக வந்துள்ளது ஹிந்து யுவ வாஹினி அமைப்பினரின் சமீபத்திய நடவடிக்கை. மீரட்டில் காதலர்கள் தனியாக இருந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, இருவரின் பெற்றோர்கள் யார்? அவர்களின் மத விவரம் உள்ளிட்டவை குறித்து கேள்வி கேட்டுள்ளனர். இதையடுத்து காவல்துறையினரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

உபியில் காதல் என்ற பெயரில் ஹிந்து பெண்கள் மதமாற்றம் செய்யப்படுவதாக வரும் குற்றச்சாட்டுகளைத் தடுக்கவே சோதனை மேற்கொண்டோம் என கூறியுள்ளது ஹிந்து யுவ வாஹினி அமைப்பு. காதலர்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட ஹிந்து அமைப்பினரின் மீது காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் காதலர்களை விசாரித்துவிட்டு அனுப்பியுள்ளது காவல்துறை. இதையடுத்து ஆதித்யநாத்தின் அமைப்பினரின் செயலுக்கு பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுகின்றன. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!