வெளியிடப்பட்ட நேரம்: 18:54 (12/04/2017)

கடைசி தொடர்பு:16:24 (13/04/2017)

மனைவியைக் கொல்ல முயற்சித்தவர் குற்றவாளி இல்லையாம்! ஏன்?

மனைவி

ண்ணெண்ணெய் ஊற்றி பெண் எரிக்கப்பட்ட வழக்கில், மனைவியை கொல்ல முயற்சித்தவர் குற்றவாளி இல்லை என மும்பை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை, சோலாப்பூரில் வசித்து வருபவர் ஹனுமத் சவான். இவரது மனைவி வந்தனா. இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. வந்தனாவின் நடத்தை மீது ஹனுமத் சவானுக்கு பல வருடங்களாகவே சந்தேகம் இருந்தது. மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டதாக நினைத்தார். இதனால், இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை நடக்கும். கடந்த 2008 நவம்பர் 24-ம் தேதி ஹனுமத் சவான் மது போதையோடு வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அது வலுத்து சண்டையின் உச்சத்தில் வந்தனாவை வீட்டைவிட்டு வெளியேறும்படி கூறியிருக்கிறார் ஹனுமத் சவான். வந்தனா வெளியேற மறுத்துள்ளார். 

மது போதை மற்றும் ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த ஹனுமத் சவான், வந்தனாவின் மீது மண்ணெண்ணையை ஊற்றி பற்றவைத்து விட்டார். உயிர் வலியில் வந்தனா அலறியதும் செய்த முட்டாள்தனத்தை உணர்ந்த ஹனுமத் சவான், தீயை அணைக்க வந்தனா மீது தண்ணீரை ஊற்றி, தீயை அணைத்து மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்றுள்ளார். ஆனால், 77 சதவிகித தீக்காயங்களால் பாதிக்கப்பட்டிருந்த வந்தனா, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலம் பெறப்பட்டது. அதில், கணவர் ஹனுமத் சவான் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்தனா, அதிர்ச்சியின் காரணமாக இறந்துவிட்டார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த மும்பை குற்றவியல் நீதிமன்றம், வந்தனாவின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், 2011 ஏப்ரலில் ஹனுமத் சவானுக்கு ஆயுள் தண்டனை (இந்திய தண்டனைச்சட்டம் 302) விதித்தது. 

இவ்வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை ஐகோர்ட் நீதிபதிகள் தகில்ரமணி மற்றும் கர்னிக் அடங்கிய அமர்வு, ஹனுமத் சவான் கொலையாளி இல்லை எனத் தீர்ப்பு அளித்துள்ளனர். அந்தத் தீர்ப்பில், ‘இவ்வழக்கின் ஆதாரங்கள் மற்றும் நடந்த சம்பவங்களைப் பார்க்கும்போது, இது எதிர்பாராத நிகழ்வு. ஹனுமத் சவான் வந்தனாவை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்படவில்லை. ஹனுமத் சவானுக்கு கொலை செய்யும் எண்ணம் இருந்திருந்தால், வந்தனாவின் உடலில் தீப்பற்றியவுடன் தண்ணீரை ஊற்றியிருக்க மாட்டார். காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வந்தனாவை தூக்கும்போது, ஹனுமத் சவானுக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை, வந்தனாவின் மரண வாக்குமூலம் அனைத்தும் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட ஹனுமத் சவானுக்கு எதிராக மாறியுள்ளது. ஹனுமத் சவானின் எண்ணம் மற்றும் செயல்பாட்டு அடிப்படையில் பார்க்கையில், குற்றம் சுமத்தப்பட்டவர் கொலையாளி இல்லை எனத் தீர்ப்பு அளிக்கிறோம். இதேபோன்ற தீர்ப்பு ராஜஸ்தான் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளதை இங்கே குறிப்பிடுகிறோம்’ என்று நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள். 

சந்தேகத்தாலும் போதையாலும் மனைவியைக் கொன்ற ஒருவரை, குற்றவாளி இல்லை எனச் சொல்லி இருக்கும் இந்தத் தீர்ப்பு, மகளிர் அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஆர். ஜெயலெட்சுமி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்