வெளியிடப்பட்ட நேரம்: 20:59 (12/04/2017)

கடைசி தொடர்பு:20:54 (12/04/2017)

வாக்குப்பதிவு இயந்திரம் சர்ச்சை: தேர்தல் ஆணையம் அதிரடி சவால்

வாக்குப்பதிவு  இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதை அடுத்து, இயந்திரங்களில் முறைகேடு நடப்பதை நிரூபிக்க நேரடி சவால் விடுத்துள்ளது தேர்தல் ஆணையம். மே முதல் வாரத்தில் இதன் சோதனை நடைபெற உள்ளது.

சமீபத்தில், நடந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றுள்ளதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி புகார் எழுப்பினார். இதையடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், வாக்குப்பதிவு இயந்திரத்தை தன்னிடம் கொடுத்தால் 72 மணி நேரங்களில் அதில் முறைகேடு செய்ய முடியும் என நிரூபிக்கிறேன் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார் அவர். இதையடுத்து அனைத்து எதிர்க்கட்சிகளின் தரப்பில், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் குறை சொல்பவர்களுக்கு நேரடி சவால் விடுத்துள்ளது. வரும் மே மாதம் முதல் வாரத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிரூபிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. டெல்லியில் நான்கு கட்டங்களாக பத்து நாள்கள் இச்சோதனை நடைபெறவுள்ளது.