வெளியிடப்பட்ட நேரம்: 08:56 (13/04/2017)

கடைசி தொடர்பு:08:55 (13/04/2017)

ராணுவ வீரர்கள் பற்றாக்குறை... திணறுகிறதா இந்திய ராணுவம்!?

 

இந்திய ராணுவத்தில் வீரர்கள் அதிகாரிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

2016 ஜனவரி 2, பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீரென்று நுழைந்து தாக்குதல் நடத்தியதில் ஏழு இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

2016 செப்டம்பர் 18 - ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாமுக்குள் நுழைந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய வீரர்களை இழந்தோம். 

2016 நவம்பர் 29 - நக்ரோடா ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 வீரர்கள் கொல்லப்பட்டனர். 

2017 ஜனவரி 8 - அக்னூர் ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று பணியாளர்கள் உயிரிழந்தனர்.  

உலகில் மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்று இந்தியா. இந்திய எல்லைப் பகுதியில்தான் தீவிரவாத தாக்குதல்கள் அதிகளவில் நடந்தன. ராணுவ முகாமுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் அளவுக்குப் பயங்கரவாதிகள் முன்னேறிவிட்டதை, பதான்கோட், உரியை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சர்ஜிக்கல் அட்டாக் நடத்தி நம்முடைய ராணுவ வலிமையை நிரூபிக்க வேண்டி உள்ளது.

பதான்கோட் விமானப்படை தள தாக்குதல்

பதான்கோட், உரி தாக்குதலைத் தொடர்ந்து முப்படைகளைப் பலப்படுத்த 'ட்ரை சர்வீஸ் கமிட்டி'யை அமைத்தது இந்திய பாதுகாப்புத் துறை. தரைப்படை, கப்பல் படை, விமானப் படையைப் பலப்படுத்தச் செய்ய வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து அந்தக் கமிட்டி தன்னுடைய பரிந்துரையை அளித்துள்ளது. அந்தப் பரிந்துரைகள் இந்திய ராணுவம் உண்மையில் திணறுகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. 

இந்தக் கமிட்டி, "இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய ராணுவத்துக்குக் கூடுதலாக 18 ஆயிரம் ராணுவ வீரர்களைச் சேர்க்க வேண்டும், அதிநவீன ராணுவத் தளவாட பயிற்சி, இவர்களுக்கு அளிக்க வேண்டும். 18 ஆயிரம் வீரர்களைக் கொண்டு 370 புதிய படைப்பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். அதிக அளவில் இளைஞர்களைப் பணியில் சேர்க்க வேண்டும். இவர்களுக்குப் பயிற்சி கொடுத்து தயார் நிலையில் வைக்கக் கால அவகாசம் தேவைப்படும் என்பதால், உடனடி தேவைக்காக, சமீபத்தில் ஓய்வு பெற்ற வீரர்களை மீண்டும் பணியில் சேர்க்கலாம்" என்று பரிந்துரைத்துள்ளது. மேலும், ராணுவம் எல்லா வகையிலும் நவீனமாக இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளது. 

இதன் அடிப்படையில், உடனடியாக 18 ஆயிரம் ராணுவ வீரர்களைப் பணியில் சேர்ப்பதற்கான உத்தரவை வழங்க வேண்டும், அதிநவீன இயந்திரத் துப்பாக்கி, புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட், இரவில் பார்க்கக் கூடிய கண்ணாடி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று ராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது. 370 புதிய படைப்பிரிவுகளை உருவாக்க வேண்டும் என்றால், ராணுவத்துக்குக் கூடுதலாக ஒன்றே கால் கோடி ரூபாய் செலவாகும். இதுதவிர, பணியாளர்கள் நியமனம், ஆயுதங்கள், பயிற்சி எல்லாம் சேர்த்தால் பல நூறு கோடிகள் தேவைப்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. 

ராணுவ வீரர்கள் பற்றாக்குறை மட்டுமல்ல... அதிகாரிகள் அளவிலும் பற்றாக்குறை உள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சுபாஷ் ராமராவ் பாம்ரே தெரிவித்துள்ளார். மாநிலங்கள் அவையில், கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாகப் பதில் தெரிவித்துள்ள பாம்ரே, "இந்திய ராணுவத்தில், 9,000 அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது. இதில், தரைப்படையில் 7,986-ம், கப்பல் படையில் 1,256-ம் அடங்கும். விமானப்படையில் பற்றாக்குறை ஏதும் இல்லை. ஜூனியர் கமிஷன்ட் ஆஃபீசர்ஸ் அளவில், தரைப்படையில் 25 ஆயிரம் அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது. கப்பல் படையில், 12,785, விமானப்படையில் 13,614 அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார். 

உரி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி.

ராணுவ வீரர்கள், அதிகாரிகள் பற்றாக்குறை ஒரே நாளில் வந்து விடவில்லை. காலம் காலமாகப் பற்றாக்குறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், பதற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கவும் பற்றாக்குறையைக் குறைக்கவும் எந்த ஒரு செயல்திட்டத்தையும் இதுவரை ஆண்ட, ஆளும் அரசுகள் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேநேரத்தில், உயர் அதிகாரிகள் மட்டத்தில் எந்தப் பற்றாக்குறையும் இல்லை. ஆனால், உத்தரவு என்று வந்தால், களத்தில் இறங்கிப் போராட வேண்டியது இளநிலை அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள்தான். அவர்கள் எண்ணிக்கையில் பற்றாக்குறை இருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவிடும். எனவே, அரசு அவசர கால நடவடிக்கை மேற்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம். 

- பா.பிரவீன் குமார்


டிரெண்டிங் @ விகடன்