இந்தியாவின் முன்னணி மல்டிபிளக்ஸ் நிறுவனங்களில் ஒன்று ஐநாக்ஸ். இந்நிறுவனம் நாடு முழுவதிலும் 74 நகரங்களில் 167 திரையரங்குகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் அவர்களின் குழுமத் திரையரங்குளில் விற்பனை செய்யப்பட்ட உணவுப் பொருள்களின் அளவை ஆண்டு அறிக்கையாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் 2022-ம் ஆண்டில் மட்டும் 863 டன் பாப்கார்ன் விற்பனையாகியுள்ளது. அதில் 7.88 மெட்ரிக் டன் பாப்கார்ன் மும்பையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 19.38 லட்சம் சமோசாக்கள் விற்பனையாகியுள்ளன. இவற்றில், 10.7 சதவிகித சமோசாக்கள் சென்னை, ஐதராபாத், மும்பை போன்ற நகரங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

82 டன் பொரித்த துரித உணவுகள் விற்பனையாகியுள்ளன. அதேபோல் 38.15 லட்சம் லிட்டர் குளிர்பானங்கள் 20.28 லட்சம் லிட்டர் டீ, காபி விற்பனையாகியுள்ளன. சென்னையில் மட்டும் 75 சதவிகித டோனட்களும், மதுரையில் 26 சதவிகித ஐஸ்கீரிம்களும் விற்பனையாகியுள்ளன. இதைத் தவிர்த்து டிம் சம்ஸ், நூடுல்ஸ், மோமோ போன்ற சீன உணவு வகைகளும் அதிக அளவில் மக்களால் விரும்பி வாங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.