வெளியிடப்பட்ட நேரம்: 12:24 (13/04/2017)

கடைசி தொடர்பு:12:48 (13/04/2017)

யமுனை நதியைச் சீர்குலைத்த ’வாழும் கலை’யின் கலாசார விழா!

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் ‘வாழும் கலை’ சார்பாக, கடந்த வருடம் கொண்டாடப்பட்ட ‘உலக கலாசார விழா’வால் பாதிக்கப்பட்ட யமுனையை மீட்க, 10 வருடங்கள் ஆகும்' என தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நிபுணர்கள் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

aol

 2016-ம் ஆண்டு மார்ச் மாதம், யமுனை நதிக்கரையில் ‘வாழும் கலை’ சார்பாக ‘உலக கலாசார விழா’, சுமார் 300 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் ஆக்கிரமித்துக் கொண்டாடப்பட்டது. இதனால் ஏற்பட்ட இயற்கைச் சீரழிவுகளைக் கணக்கிட, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சார்பில் நிபுணர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. சமீபத்தில் வெளியான அந்தக் குழுவின் முடிவறிக்கை, 'முற்றிலும் அழிந்த இயற்கை வளங்களை மீட்பது கடினம்' எனத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் பிரதமர் மோடி பங்கேற்ற அந்த விழாவில், நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் அபகரிக்கப்பட்டன, ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டு, காடுகள் சீர்குலைக்கப்பட்டன. விழா முடியும் வேளையில் எழுந்த பல கண்டனங்களாலும், சர்ச்சைகளாலும் பசுமைத் தீர்ப்பாயம் சார்பில் ஏழு பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அந்தக் குழுவின் அறிக்கையில், பாதிக்கப்பட்ட யமுனையை மீட்க சுமார் 10 வருடங்கள் ஆகும் என்றும் அதற்காக 42 கோடி ரூபாய் செலவாகும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.