இப்போது எப்படி இருக்கிறது ஜாலியன் வாலாபாக்? #SpotReport #VikatanExclusive | Remembering the Jallianwala Bagh Massacre: Place Will Leave You Teary Eyed #SpotReport

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (13/04/2017)

கடைசி தொடர்பு:10:36 (14/04/2017)

இப்போது எப்படி இருக்கிறது ஜாலியன் வாலாபாக்? #SpotReport #VikatanExclusive

ஜாலியன் வாலாபாக்

ந்தியா சுதந்திரமடைய பல்வேறு விதமான சிக்கல்களையும் சூழல்களையும் சந்தித்திருக்கிறது. இதில், நம் நாட்டுக்காகப் போராடியவர்கள் எண்ணில் அடங்காதவர்கள். அவ்வாறு பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தை நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா என்பது ஒருபுறம் இருந்தாலும்... மறுபுறம், நம் நாட்டுக்காகப் போராடியவர்களை நாம் அவ்வப்போது கொண்டாடத் தவறுகிறோம். அவ்வாறு ஆங்கிலேயரின் ஆக்ரோஷச் செயலுக்குப் பலியாகி எத்தனையோ நபர்கள் தம் உயிரை நீத்துள்ளனர். இந்தியச் சுதந்திரத்துக்காகக் கணக்கில் அடங்காத முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில், மிக முக்கியமானதும் கொடூரமானதும் ஜாலியன் வாலாபாக் ஆகும். அந்த நிகழ்வு நடைபெற்ற தினம் இன்று... 

அப்போது ஆங்கிலேயரின் அரசாங்கம் நம்மை ஆண்டுகொண்டிருக்கையில், 1919 பிப்ரவரியில் வந்த ரௌலத் சட்டத்தின்படி விடுதலைப் போராட்ட வீரர் எனச் சந்தேகிக்கும் யாரையும் விசாரணையின்றிக் கைதுசெய்து சிறையில் அடைக்கலாம் என்ற விதிமுறையை ஆங்கிலேயர் கையாண்டனர். இதனை எதிர்த்து, நாட்டில் பல்வேறு இடங்களில் சுதந்திர வேட்கை பற்றி எரிந்தது. ராம நவமி அன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இந்திய மக்கள் அனைவரும் சாதி, மத பாகுபாடின்றி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். இதனை யூகித்துக்கொள்ள முடியாமல் அந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்த மருத்துவர்கள் சத்யபால், சைபுதீன் கிச்சுலு ஆகிய இருவரையும் ஆங்கிலேயர் கைதுசெய்தனர். இந்தச் சம்பவத்தினால் பஞ்சாப் பகுதி முழுவதும் உள்ள இந்தியர்கள் கோபத்துக்கு உள்ளாகி போராட்டத்தில் இறங்கினர். ஆனால், அவர்கள் ஆங்கிலேயரின் கொடுங்கோல் ஆட்சியினால் விரட்டியடிக்கப்பட்டனர், சிலர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர். நிலைமை கைமீறிப்போக, அடுத்த நாள் களத்தில் குதித்தார் ஜெனரல் டயர் என்னும் ஆங்கிலேய அதிகாரி. அமிர்தசரஸை தன் கைக்குள் கொண்டுவர முடிவு செய்யப் பல்வேறு விதமான ஆலோசனைகள் மேற்கொண்டார்.

அடுத்த நாள் (ஏப்ரல் 13) பஞ்சாப் மாநிலத்தின் புகழ்பெற்ற பண்டிகை `பைசாகி`. இது சீக்கியர்களின் புனித தினமாகக் கருதப்படும். அன்று ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார் டயர். இந்தப் பொதுக்கூட்டம் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு 400 மீ தொலைவில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்னும் இடத்தில் நடைபெற இருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் சுதந்திரம் கிடைக்கப்போகிறது என்ற கனவோடு இந்த இடத்தில் குழுமியிருந்தனர். மக்கள் வந்து ஒருமணி நேரம் கழித்து 150-க்கும் மேற்பட்ட சிப்பாய்கள் கொண்ட படையுடன் வந்தார் ஜெனரல் டயர். மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சிறிய சந்துபோல் உள்ள நுழைவுவாயில் கொண்ட இந்த ஜாலியன் வாலாபாக் சுற்றியும் உள்ளேயும் சிப்பாய் படை சூழ்ந்துவிட்டது. எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி தன் சிப்பாய் படையிடம் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார் டயர். கையில் துப்பாக்கி ஏந்தித் தயாராக இருந்த வீரர்கள் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினர். பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் தப்பிக்க ஆங்காங்கே ஓடினர்.

ஜாலியன் வாலாபாக்

இதன் அனைத்துப் பாதைகளும் ஆங்கிலேயரால் அடைக்கப்பட்டன. அவர்கள் துப்பாக்கித் தோட்டாக்களுக்குப் பலியானதைவிடக் கூட்டநெரிசலில் பலியானவர்கள்தான் அதிகம். உயிருக்குப் பயந்து சிலர் அங்கிருந்த கிணறு ஒன்றில் குதித்தனர். அவர்களைக்கூட விட்டுவைக்கவில்லை. ஆங்கிலேயரின் அராஜகக் குண்டுகள் கிணற்றினுள்ளும் பாய்ந்தன. இதில், 1,500-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். 3,000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். ஆனால், 300 பேர் இறந்தனர் என்றும் 500 பேர் காயமடைந்தனர் என்றும் கணக்குக் காட்டப்பட்டது. “இந்த நடவடிக்கைக்கும் எனக்கும் உடன்பாடானதே” என்று தன் கருத்தை முன்வைத்தார் பஞ்சாப் மாநிலத்தின் அப்போதைய துணை ஆளுநர் மைக்கேல் ஓ டுவையர். ஜெனரல் டயர் இந்தியர்களைச் சுட்டுவிட்டு, ``சுட்டேன்.... சுட்டேன் இந்தியர்களை இந்திய மண்ணிலேயே சுட்டேன். துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்துவிட்டன. இல்லையென்றால், இன்னும் நிறைய இந்தியர்களைக் கொன்றிருப்பேன்...`` என்று சம்பவ இடத்திலேயே கத்தினார். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் உத்தம் சிங்கின் கண்ணில் சுதந்திர தாகம் பற்றி எரியத் தொடங்கியது. அந்த ஆங்கிலேயரைப் பழிவாங்க நினைத்து பல நாள்கள் தவம் கிடந்தார் உத்தம் சிங். அவர்களைக் கொல்வதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்துவந்தார். ஆனால், ஜெனரல் டயர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது. ஆனால், அவரது கோபம் தணியவில்லை. அன்று டயரின் செயலுக்கு ஆதரவு கொடுத்த மைக்கேல் ஓ டுவையரைச் சுட்டுக்கொன்று ``ஆங்கிலேயரை அவர்கள் மண்ணிலேயே கொன்றேன்`` என்று பதிலடி கொடுத்தார். 

ஜாலியன் வாலாபாக் சம்பவம் இந்தியப் போராட்டக்களத்தின் கறுப்புத் தினமாகத்தான் பார்க்க வேண்டும். இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார், புரட்சியாளர் பகத் சிங் உருவாவதற்கு இந்தச் சம்பவம்தான் விதை என்றே சொல்லலாம். இத்தகைய சிறப்புமிக்க வரலாற்றுக் குறியீடு தற்போது எப்படி இருக்கிறது? அன்று போர்க்களமாகக் காட்சியளித்த அந்த இடம் தற்போது பூங்காபோல் இருக்கிறது. அந்த இடத்தின் நடுவே, துப்பாக்கிக் குண்டைப்போல பெரிய தூண் கம்பீரமாக நிற்கிறது. அந்தத் தூணைப் பார்த்தாலே நம் மனதில் நம் இந்தியர்களின் உயிர்த் தியாகம் நினைவுக்கு வருகிறது. 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிருக்குப் பயந்து விழுந்த கிணறு இன்னும் அந்த இடத்தில் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்தக் கிணற்றைப் பார்த்தால் அவர்களின் நிலைமை நம் கண்ணீர்த்துளியாக வெளிப்படுகிறது. மேலும், டயரும் அவரது படை வீரர்களும் நின்ற இடத்தில் ஆங்காங்கே சின்ன பிரமிடுகள்போல் அமைத்திருக்கிறார்கள். அங்குள்ள சுவரில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது குண்டுகள் பாய்ந்த துளைகளைக் காணலாம். 

ஜாலியன் வாலாபாக்

இந்த வீரர்களின் ஆன்மாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அணையா ஜோதி ஒன்று எரிந்துகொண்டே இருக்கிறது. இந்த இடத்துக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து நம் வரலாற்றின் முக்கியப் பக்கங்களைத் திருப்பிப் பார்த்து நம் இந்தியர்கள் எவ்வாறு எல்லாம் துயரப்பட்டு இந்தச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளனர் என்று நினைவுகூர்ந்துகொண்டே மனதில் கனத்தோடு நகர்கின்றனர்.

ஆக, ஜாலியன் வாலாபாக் சம்பவத்தைப் பற்றி நினைவுகூர்ந்தால் எந்த ஒரு இந்தியருக்கும் கோபமும் நாட்டின் மேல் உள்ள பற்றும் வெளிவரும். இவ்வாறு பல உயிர்த் தியாகம் செய்து பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தைப் பேணிக்காப்பது ஒவ்வோர் இந்தியனின் கடமையுமல்லவா?!

 – உ.சுதர்சன் காந்தி (மாணவப் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்