இந்த சைஸ்தான் பெண்களுக்கு அழகாம்!  இது பிளஸ்-2 பாடமென்றால் நம்புவீர்களா?!  | CBSE Textbook defines '36-24-36' as best female body shape

வெளியிடப்பட்ட நேரம்: 17:03 (13/04/2017)

கடைசி தொடர்பு:16:07 (14/04/2017)

இந்த சைஸ்தான் பெண்களுக்கு அழகாம்!  இது பிளஸ்-2 பாடமென்றால் நம்புவீர்களா?! 

மாணவிகள்

சி.பி.எஸ்.இ பாடத்திட்டம்தான் சிறந்தது என்ற கருத்து இன்றைக்கு படித்தவர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இதன் விளைவு, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனினும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் எந்த அளவுக்குக் குளறுபடிகள் உள்ளன என்பதற்கு எடுத்துக்காட்டாக மற்றுமொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

'பெண்ணின் சரியான உடல் அளவு என்ன?' என்று யாராவது கேட்டால், என்ன அபத்தமான, நாகரிகமற்ற கேள்வியைக் கேட்கின்றார் என்று நினைக்கலாம். ஆனால், அதுவே பிளஸ்-2 மாணவர்களுக்கு, தேர்வில் மதிப்பெண் பெற்றுத் தரும் கேள்வியாக இருக்கலாம். ஆம்...டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பிளஸ்-2 பிசிக்கல் எஜூகேஷன் புத்தகத்தில் ஆண், பெண் உடல் அமைப்பு பற்றிய பாடத்தில், அளவு வரை விரிவாக விவரித்திருக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் வி.கே.ஷர்மா. பள்ளி மாணவர்களுக்கு எப்படி இதுபோன்ற கருத்துக்களைச் சொல்லலாம் என்று நாடுமுழுவதும் சர்ச்சை கிளம்பியுள்ளது. 

சி.பி.எஸ்.இ பிளஸ்-2 பாடத்திட்டத்தின் பிசிக்கல் எஜூகேஷன் பாடப் புத்தகத்தில், உடல் அமைப்பு, அளவு பற்றி ஆசிரியர் விவரிக்கின்றார். உடல் அளவைப் பற்றிச் சொல்லும்போது, "ஆண் மற்றும் பெண்களின் உடல் அமைப்பில் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாட்டை நேரடியாகவே காணமுடியும். பெண்ணின் உடலமைப்பைக் காட்டிலும், ஆணின் உடல் அமைப்பு பொதுவாக பெரிதாக இருக்கும்" என்கிறார். அடுத்ததுதான் சிக்கலான கருத்து... பெண்ணின் உடல் அமைப்பைப் பற்றி இதில்தான் விவரிக்கின்றார். "ஆணுக்கும், பெண்ணுக்குமான உடல் அமைப்பில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. பெண்ணுக்கு 36", 24", 36" என்ற உடல் வடிவமைப்பே (ஷேப்) சிறந்தது எனக் கருதப்படுகிறது. 'மிஸ் வேர்ல்ட்', 'மிஸ் யுனிவர்ஸ்' போன்ற சர்வதேச அளவிலான அழகிப் போட்டிகளில் இந்த 'ஷேப்' கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆண்களைப் பொறுத்தவரை, ஆங்கில எழுத்தான 'வி' (V) ஷேப்தான் சிறந்தது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்தோடு முடிக்கவில்லை... "உடற்பயிற்சி உடல் அமைப்பை அழகாக்குகிறது" என்ற தலைப்பில் மீண்டும் இந்த ஷேப் பற்றி நூல் ஆசிரியர் விவரித்துள்ளார். உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்துவந்தால், நம்முடைய உடல் அமைப்பை அழகாக்கலாம். 'மிஸ் யுனிவர்ஸ்' போன்ற போட்டிகளில் இதைக் காணலாம். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அழகான உடல் அமைப்புக்கு பாராட்டுக் கிடைக்கிறது. பெண்களின் உடல் வடிவமைப்பு அவ்வளவு எளிதில் வந்துவிடாது. இதற்குப் பல்வேறு பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். உண்மையில் இதற்கு நம்முடைய தசைகள்தான் காரணம். அதுதான் நம்முடைய உடலுக்கு வடிவத்தைக் கொடுக்கின்றன" என்கிறார். 

"பெண்ணின் முதுகெலும்பு கொஞ்சம் பெரியதுதான்...ஆனால் கை, கால் சிறியதாக இருக்கிறது. அதுவே, ஆண்களுக்குப் பெண்களைக் காட்டிலும் கை, கால்கள் பெரிதாக இருக்கின்றன. பெண்ணின் இடுப்பு எலும்பு சற்று அகலமாக இருக்கிறது. மூட்டு சற்று விலகி இருக்கிறது. பெண்ணின் இந்த உடல் அமைப்பு காரணமாக அவர்களால் சரியாக ஓட முடிவதில்லை" என்கிறார். இப்படி, முழுக்க முழுக்கப் பெண்களைப் பற்றிச் சொல்லும் நூல் ஆசிரியர், ஆண்களைப் பற்றி அவ்வளவாகச் சொல்லவில்லை. போகிறபோக்கில், 'வி' ஷேப் நல்லது என்று ஒரு வரியில் முடித்துவிடுகிறார். இதுமட்டுமல்ல... இன்னும் ஆண், பெண் ஒப்பீடுகள் தொடர்ந்துகொண்டே செல்கின்றன.

சி.பி.எஸ்.இ புத்தகம்

இதுகுறித்து சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தப் புத்தகத்தைச் சி.பி.எஸ்.இ பரிந்துரை செய்யவில்லை. சில குறிப்பிட்ட பாடங்களைப் பள்ளிகளே தேர்வுசெய்ய விதிகள் அனுமதிக்கின்றன. அதன் அடிப்படையில், சில பள்ளிகள் உடற்கல்வி, ஃபிட்னஸைப் பாடமாக வைத்திருக்கின்றன. அவர்கள்தாம் இந்தப் புத்தகத்தைத் தேர்வு செய்திருக்கின்றனர். பொதுவாக, தனிநபர்களின் புத்தகத்தை சி.பி.எஸ்.இ பரிந்துரைப்பதில்லை. அப்படியே பரிந்துரைப்பதாக இருந்தால், பலகட்ட ஆய்வுக்குப் பிறகே பரிந்துரைப்போம்" என்று தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில் இதுபோன்ற தவறுகள் இடம்பெறுவது இது முதல்முறையல்ல. கடந்த ஆண்டு, ஆறாம் வகுப்புப் பாடத்தில் குரங்கு ஒன்று புகைபிடிப்பது போன்ற படம் இடம் பெற்றிருந்தது. அது மாணவர்கள் மத்தியில் புகையிலை பயன்படுத்தும் எண்ணத்தை ஏற்படுத்தலாம் என எதிர்ப்பு எழுந்தது. இதேபோல், பிளஸ்-2 சமூகவியல் பாடப்புத்தகத்தில், அழகின்மை மற்றும் உடலின் குறைபாடுதான் வரதட்சணைக்குக் காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதுகுறித்துக் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம். "சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பல தனியார் நிறுவனங்கள் புத்தகம் வெளியிடுகின்றன. இந்தப் புத்தகங்களில் பல விஷயங்கள் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் இருக்கும். ஒரு கருத்தைச் சொல்லவேண்டிய இடத்தில், புத்தக ஆசிரியர் தன்னுடைய சுய கருத்தியலுக்கு ஏற்ப மாற்றிச் சொல்வது வழக்கமாக இருக்கிறது. இதுதான் அவர்கள் இதுவரை கடைப்பிடிக்கும் வழக்கமாக இருக்கிறது. அதனால், பல நேரங்களில் தவறான தகவல்கள் இடம்பெற்று விடுகின்றன. ஆங்கில இலக்கணப் புத்தகத்திலேயே இலக்கணப் பிழை நிறைய உள்ளது. அதுதவிர, மிக மோசமான கருத்தியல் பிரசாரமும் நடக்கிறது. அதுபோன்ற புத்தகங்களுக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சி.பி.எஸ்.இ கை கழுவி விடமுடியாது. இதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு, அவர்களுக்குத்தான் இருக்கிறது. 

சி.பி.எஸ்.இ பாடத்திட்டம்தான் தரமானது என்பது போன்ற தவறான கருத்தியல் பரப்பப்பட்டு வருகிறது. ஒரு பொருளை மக்கள் மனதில் பதியச் செய்வதற்கு எப்படி விளம்பரங்கள் செய்யப்படுகிறதோ, அதுபோலச் சி.பி.எஸ்.இ பள்ளிகள் பற்றிய கருத்தியலை மக்கள் மனதில் சிலர் உருவாக்கி வருகின்றனர். இதை நம்பும் மக்கள், பின்னர் ஏமாற்றப்பட்ட பிறகு, 'நாங்களாக உங்களை ஏமாற்றவில்லை. வேறு யாரோ உங்களை ஏமாற்றி விட்டனர்' என்று கூறுவது எந்தவகையிலும் நியாயமில்லை. 

கற்றல் என்பது கேள்வி எழுப்புவதுதான். ஆனால், இன்றைக்குக் கேள்வி எழுப்ப வாய்ப்பே கொடுக்காத வகுப்பறையில், இப்படியான பாடத்தைக் கொடுக்கும்போது, பெண் என்பவள் ஒரு நுகர்வுப்பொருள், ஆணுக்கான பொருள் என்ற கருத்தியல் வலுப்பெற வழிவகுக்கும். பெண்ணைச் சக மனிஷியாக, ஆணைப்போலப் பெண் என்ற பாலியல் சமத்துவத்தைக் கற்பிக்காமல், அதற்கு எதிரான நிலைப்பாட்டை மாணவப் பருவத்திலேயே விதைக்கின்றனர்.

சரி, ஆண் இப்படி இருக்க வேண்டும், பெண் இப்படி இருக்க வேண்டும் என்கிறீர்களே... மூன்றாம் பாலினத்தவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஏன் சொல்லவில்லை? அவர்களை மனிதர்களாகவே கருதவில்லையா? இப்படிச் சொல்வது எல்லாம் தவறான அணுகுமுறை" என்றார். 

உடற்பயிற்சிப் பாடம், ஒருவர் எப்படி ஃபிட்டாக இருக்க வேண்டும்? ஃபிட்னஸ்-க்கு என்ன சாப்பிடலாம்? அதற்கான பயிற்சிகள் என்னென்ன என்பது பற்றி சொல்லித் தரலாமே தவிர, குறிப்பிட்ட அளவு இருந்தால்தான் அழகு என்று சொல்லித்தருவது, அவர்களைப் பாலியல் ரீதியாகத் திசை திருப்பும் நடவடிக்கையாகவும், ஆண், பெண் பேதத்தை விதைப்பதாகவுமே அமையும். இதுபோன்ற தவறுகள் இனிமேலாவது நடக்காதவகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை! 

- பா.பிரவீன் குமார்


டிரெண்டிங் @ விகடன்