Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமைச்சர் பதவியை அம்பேத்கர் உதறிய காரணம் தெரியுமா! #MustKnowFact

அம்பேத்கர்

அம்பேத்கர் என்றதும், இந்தியச் சட்டங்களை உருவாக்கிய மேதை, ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் உழைப்பைச் செலுத்தியவர் என்ற இரண்டு விஷயங்கள் எல்லோரின் நினைவுக்கும் வரும். இந்த இரண்டு அடையாளங்களைத் தவிர, அம்பேத்கர் தனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் பெண்களின் வாழ்வு பற்றியும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் குறித்தும் கவனம் செலுத்தி இருப்பதைப் பார்க்க முடிகிறது.

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை பெண்கள் மதிக்கப்பட்டு, அரசர்கள் முடிசூடும் விழாக்களில் முக்கிய இடம்பிடிப்பதைக் குறிப்பிடுகிறார். பதவியேற்ற அரசர், தனது மனைவிக்கும் பொது அமைப்புகளில் உள்ள பெண் தலைவிக்கும் வணக்கம் செலுத்துவதைச் சுட்டிக்காட்டி, உலகின் மற்ற பகுதிகளில் இதுபோன்ற நடைமுறை இருந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார். அப்படி பெருமிதத்தோடு வாழ்ந்த பெண்களின் வீழ்ச்சிக்கு என்ன காரணம் என அலசுகிறார். மதவாதிகளின் ஆதிக்கமும் அவர்கள் பெண்களை அடிமைப்படுத்தும் செயல்களை உருவாகியதையும் ஆதாரத்தோடு விளக்குகிறார். குறிப்பாக, 'மநு ஸ்மிருதி' என்ற நூலில், பெண்கள் பற்றிய பல கருத்துகள், பெண்களுக்கு எதிராக இருப்பதைச் சுட்டிக்காட்டி, அதற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினார். மநு ஸ்மிருதியைத் தீயிட்டுக் கொளுத்தும் அளவுக்கு தீவிரமாக செயலாற்றினார்.

அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவில் நடத்தப்பட்ட பெண்களுக்கான சிறப்பு மாநாடுகளில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டுள்ளார் அம்பேத்கர். அங்கு பேசும்போது, 'தலித் மக்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விடுதலைப் பெற வேண்டுமெனில், தலித் பெண்கள் முதலில் விடுதலையடைய வேண்டும்' என அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.

அம்பேத்கரின் மிகப் பெரிய பலமே, அவரின் ஆழ்ந்த வாசிப்புதான். எது ஒன்றையும் மேம்போக்காகச் சொல்லும் வழக்கமற்றவர். அதுபோலவே, பெண்களின் ஒடுக்குமுறைக்கான காரணத்தையும் தீவிரமாக ஆய்வுசெய்கிறார். சைமன் குழுவில் கூறப்பட்டிருந்த பெண் கல்வி மற்றும் பெண் விடுதலைப் பற்றி ஆராய்ந்து, வட்டமேஜை மாநாட்டில் பெண்களின் பங்களிப்பு குறித்து பேசுகிறார்.

நம் நாட்டில் நிலவிய சதி எனும் உடன்கட்டை ஏறும் கொடூரப் பழக்கத்தை கடுமையாக எதிர்த்தவர் அம்பேத்கர். ஒரு பெண்ணின் கணவன் இறந்ததும், அவனை எரியூட்டும்போது அந்தப் பெண்ணையும் அதில் எரிப்பதே 'உடன்கட்டை ஏறுதல்' என்பது. இந்தப் பிரச்னையின் அடிப்படையான விஷயங்களான விதவைப் பெண்ணை வீட்டில் வைத்திருப்பது, குறுக்கிடும் சாதி என அனைத்தையும் ஆய்வுசெய்த அம்பேத்கர், "தன் சாதிக்கு உள்ளேயோ, வெளியேயோ மறுமணம் புரிந்துகொள்ளக்கூடிய பிரச்னை தீர்ந்துபோகிறது. அதனால், அவளைக் கட்டாயப்படுத்தி விதவையாக வைத்திருப்பது, எரித்துவிடுவதைவிட மேலானது" என்கிறார்.

இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு நமது நாட்டுக்கான சட்டங்களை இயற்றுவதில் அமைக்கப்பட்ட குழுவில், அம்பேகரின் பங்களிப்பு அளப்பரியது. இந்து மதம் பற்றிய கடும் விமர்சனங்களைக்கொண்டிருந்த அம்பேத்கர், 'இந்து சட்டத்தை' உருவாக்கவும் செய்கிறார். அதற்கான முக்கியக் காரணம், பெரும்பான்மையான பெண்கள், தாங்கள் இந்து மதத்தில் இருப்பதாகக் கருதுகிறார்கள். அவர்களுக்கான உரிமைக்காகவே அந்தப் பணியில் அம்பேத்கர் ஈடுபடுகிறார்.

ஒரு நாட்டின் சட்டத்தை இயற்றுவதில் என்னென்ன விஷயங்கள் முதன்மையாகப் பார்க்க வேண்டும் என்பதைப் பற்றி அம்பேத்கர் கூறுகையில், "வர்க்க ஏற்றத்தாழ்வுகளும் பாலின ஏற்றத்தாழ்வுகளுமே இந்து சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது. அதனை அப்படியே விட்டுவிட்டு, பொருளாதார சிக்கல்கள் குறித்த சட்டங்களை மட்டும் இயற்றிக்கொண்டே போவது, நமது அரசமைப்புச் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்குவதாகும். இது, சாணிக் குவியலின் மீது அரண்மனையைக் கட்டுவதற்கு ஒப்பானது. இந்து சட்டத் தொகுப்புக்கு நான் வழங்கும் முக்கியத்துவம் இதுதான். இதன் பொருட்டே எனது மன வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு நான் பதவியில் நீடித்திருந்தேன்" என்கிறார்.

இந்து சட்டத்தில் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு, விவாகரத்து உரிமை, சொத்து உரிமை உள்பட பலவற்றை முன்வைக்கிறார் அம்பேத்கர். ஆனால், அவற்றுக்குப் பாராளுமன்ற குழு ஏராளமான முட்டுக்கட்டைகளைப் போட்டது. பிறகு, திருமணம் மற்றும் மணவிலக்கு போன்றவற்றுக்கு அனுமதி என்பதாகப் பேச்சு எழுந்தது, ஆனால், இறுதியில் பெண்களுக்கான பல உரிமைகளை மறுத்தது. இதை அம்பேத்கரின் வரிகளிலேயே சொல்வதென்றால், 'தலையில் இடி விழுந்ததைப்போல' அதிர்ச்சியானார்.

அப்போதைய ஆட்சியாளர்களின் இத்தகைய முடிவினால் அம்பேத்கர் தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரின் பதவி விலகலைப் பற்றி பல்வேறு கருத்துகள் பேசப்பட்டதால், தனது விலகலுக்கான காரணத்தைத் தெளிவாக கூறுகிறார். "சட்ட வரைவைக் கைவிடும் பிரதமரின் முடிவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனது பதவி விலகலுக்காக இந்த விரிவான விளக்கத்தை நான் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனெனில், நான் நோய்வாய்ப்பட்டிருப்பதன் காரணமாகவே பதவி விலகுவதாகக் கூறும்படி என்னிடம் சிலர் யோசனை கூறியுள்ளனர். இத்தகைய யோசனைகள் எதையும் நான் ஏற்கத் தயாரில்லை."

பெண்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடிய அம்பேத்கரை அவரது பிறந்த நாளின் நன்றியுடன் நினைவுகூர்வோம்.

- வி.எஸ்.சரவணன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close