வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (14/04/2017)

கடைசி தொடர்பு:16:04 (14/04/2017)

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை: இரண்டாம் கட்டமாக 60,000 பேரிடம் விசாரணை!

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் இரண்டாவது கட்ட விசாரணை இன்று முதல் 60,000 பேரிடம் நடத்தப்பட உள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐடி

 

பிரதமர் மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து சட்டத்துக்கு புறம்பான கறுப்புப் பண ஒழிப்பில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இன்று அரசின் இரண்டாம் கட்ட கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. இதில் 60,000-க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது வாங்கப்பட்ட சொத்துகள், இதுவரை வெளியிடப்படாத வருமானம் கொண்டவர்கள், வருமான வரித்துறைக்கு அதிகப் பணப்பரிவர்த்தனை தொடர்பாகப் பதிலளிக்காதவர்கள் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை அமல்படுத்தியதில் இருந்து 2017-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி வரை வெளியிடப்படாத வருமானமாக 9,334 கோடி ரூபாய் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய வருமான வரி வாரியம் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஜனவரி 31-ம் தேதி கறுப்புப் பண ஒழிப்பின் முதல் கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. ஆன்லைன் மூலம் 17.92 லட்சம் பேருக்கு நடத்தப்பட்ட விசாரணையில் 9.46 லட்சம் பேர் தான் பதிலளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.