குல்பூஷன் யாதவ் தூக்கு: இந்தியாவின் மூன்று நிபந்தனைகள்!

குல்பூஷன் யாதவ் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கு முன் இந்தியா தரப்பில் மூன்று நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளனன. அதன்படி, நீதிமன்ற தீர்ப்பின் நகல் உள்ளிட்ட ஆவணங்களை பாகிஸ்தானிடம் கேட்டுள்ளது இந்தியா.

பாகிஸ்தானில் உளவு வேளையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் குல்பூஷன் யாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்குத்  தண்டனை விதித்தது. இதற்கு, இந்தியாவின் தரப்பில் பலத்த கண்டனங்கள் எழுந்தன. குல்பூஷன் யாதவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டால் அது திட்டமிட்ட கொலையாகக் கருதப்படும், மேலும் பாகிஸ்தானுடனான உறவிலும் பாதிப்பு ஏற்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருந்தார். இதையடுத்து எதிர்க்கட்சிகள் தரப்பில், குல்பூஷன் யாதவை இந்தியா மீட்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்னர் இந்தியா பாகிஸ்தானிடம் மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுதம் பாம்பவாலே, 'பாகிஸ்தானிடம் குல்பூஷன் யாதவுக்கு அளிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் நகல், குற்றப்பத்திரிகை, மேலும் தூதரக அதிகாரிகளை சந்திக்கவும் அனுமதி வழங்க முறையிடப்பட்டுள்ளது' என்று  கூறியுள்ளார். இதுவரை இந்தியா தரப்பில் 13 முறை  குல்பூஷன் யாதவை சந்திக்க அனுமதி கேட்கப்பட்டும், பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!