Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இன்னா' செய்த பாகிஸ்தான் 'நன்னயம்' செய்த இந்தியா!

 

 

''பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான படகு ஒன்று சர்வதேச கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது எனவும் பின்பு... குஜராத்தில் உள்ள ஜகாவ் துறைமுகத்தில் இருந்து 59 நாட்டிகல் மைல் தொலைவில் படகைக் காணவில்லை எனவும் தகவல் கிடைத்துள்ளது. உதவி செய்ய முடியுமா?’' எனக் கடந்த 9-ம் தேதி இரவு 8.30 மணியளவில் சீனா சென்றிருந்த பாகிஸ்தான் கடலோரப் பாதுகாப்புப் படைத் தலைவரிடம் இருந்து இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படைத் தலைவருக்கு அவசரம் அவசரமாக போன் வந்தது.

பாகிஸ்தான் கடற்படை வீரர்களை மீட்ட இந்தியா

கடலைப் பொறுத்தவரை கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் இரண்டாவது பட்சம்தான். எதிரியாக இருந்தாலும் உயிர்கள் காப்பற்றப்பட வேண்டும் என்பதுதான் முதல் விதி. உடனடியாக, இந்தியக் கடலோர பாதுகாப்புப் படைத் தலைவரிடம் இருந்து  மும்பைக்கு அவசர உத்தரவு பறந்தது. கடலில் சுற்றிக்கொண்டிருந்த இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான அங்கீத், சாம்ராட், அரிஞ்சய் என்ற 3 கப்பல்கள், பாகிஸ்தான் குறிப்பிட்ட பகுதிக்கு திருப்பிவிடப்பட்டன. அத்துடன், ஒரு கடற்படை விமானமும் ஹெலிகாப்டரும் மீட்புப் பணிக்கு முடுக்கிவிடப்பட்டன. பாகிஸ்தானும் தனது கடற்பகுதியில் 3 கப்பல்கள் மற்றும் விமானங்கள் வழியாக தேடுதல் வேட்டை நடத்திக்கொண்டிருந்தது. 

அடுத்த நாள் அதாவது, 10-ம் தேதி பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் பஜ்வா, உளவு பார்த்ததாக இந்தியரான குல்பூசான் ஜாதவைத் தூக்கிலிடக் கையெழுத்திட்ட சமயத்தில்... இந்திய ரோந்துக் கப்பல் அரிஞ்சய், பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் இருவரை உயிருடன்  கண்டுபிடித்தது. பாகிஸ்தான் ரோந்து படகு, கடலில் கவிழ்ந்தது எப்படி தெரியுமா? நடந்த விஷயமே வேறு. குஜராத் அருகே சர்வதேச கடல் எல்லையை ஒட்டி  இந்திய மீனவர்கள் 60 பேர் 7 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். கடலில் கவிழ்ந்த பாகிஸ்தான் படகில் வந்த வீரர்கள், இந்திய மீனவர்களைச்  சுற்றி வளைத்தனர். பின்னர், அவர்களைக் கைது செய்து கராச்சிக்குக் கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர். அந்தக் களேபரத்தில்தான் இந்திய மீன்பிடிப் படகுடன் மோதி பாகிஸ்தான் ரோந்து படகு, கடலில் கவிழ்ந்துள்ளது. 

பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் சடலங்களை மீட்ட இந்தியா

படகில் இருந்த 6 பாகிஸ்தான் வீரர்களும் கடலில் விழுந்து உயிருக்குப் போராடியுள்ளனர். இந்திய மீனவர்கள் கடலுக்குள் குதித்து அவர்களைக் காப்பாற்ற முயற்சித்தனர். அதில், இருவரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. 4 பேர் கடலில் மூழ்கிவிட்டனர். இதற்கிடையேதான் அந்த இடத்துக்கு ரோந்துக் கப்பல் அரிஞ்சய் வந்தது.  இந்திய மீனவர்கள் நமது வீரர்களிடம் நடந்த விபரத்தைத் தெரிவித்து, பாகிஸ்தான் கடற்படை வீரர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டுமெனக் கோரியுள்ளனர். தொடர்ந்து பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் அரிஞ்சய் கப்பலுக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் வீரர்கள் இருவரும் உயிர் பிழைத்துக்கொண்டனர். 

பாகிஸ்தான் வீரர்களை மீட்ட இந்தியா

அத்துடன், இந்திய வீரர்கள் தங்கள் கடமை முடிந்துவிட்டதாகக் கருதவில்லை. கடலில் மூழ்கி இறந்துபோன பாகிஸ்தான் கடற்படை வீரர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 4 பேர்களது உடல்களையும் மீட்கவும் செய்தனர். பின்னர், சர்வதேச கடல் பகுதியில் வைத்து, உயிருடன் மீட்ட இரு பாகிஸ்தான் வீரர்களையும் 4 வீரர்களின் சடலங்களையும் பாகிஸ்தான் கடலோர ரோந்துப் படையினரிடம் ஒப்படைத்தனர். தங்கள் வீரர்களையும் சடலங்களையும் பெற்றுக் கொண்ட பாகிஸ்தான் ரோந்துக் கப்பல் கராச்சி நோக்கிப் புறப்பட்டது!

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்”- வள்ளுவன் வாக்கு

-எம்.குமரேசன்

photo credit: Shreya Dhoundial

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close