வெளியிடப்பட்ட நேரம்: 19:53 (14/04/2017)

கடைசி தொடர்பு:19:53 (14/04/2017)

தேசிய அளவில் ஹிந்தியை கட்டாயப் பாடமாக்க உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

நாடு முழுவதும் ஹிந்தியை 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாயமாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றம்

ஹிந்தி மொழியை 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்ற பொதுநல வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாயா இந்த பொதுநல வழக்கினை தாக்கல் செய்துள்ளார். 

இந்திய ஒற்றுமைக்கும் ஒருமைபாட்டுக்கும் ஹிந்தியை நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு கட்டாயாமாக்க தாக்கல் செய்துள்ள மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில், ‘மும்மொழி கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்ற கொள்கையும் பல மாநிலங்களில் இன்னும் பின்பற்றப்படவில்லை. நாட்டில் எந்தவொரு ஏற்றத்தாழ்வுகளும் இன்றி எல்லா மாநிலத்தவருக்கும் பொதுவான ஒரு தொடர்பு மொழியாக ஹிந்தி அமைய பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

'ஹிந்தி பேசப்படாத கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் வேண்டுகோளுக்கு இணங்க தான் 1968-ம் ஆண்டு கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டது. ஆனபோதிலும் இன்னும் நாட்டில் மும்மொழிக் கல்வியை மாநிலங்களில் பல நடைமுறைபடுத்தவில்லை' என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் இந்த வழக்கில் இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஹிந்தி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாயமாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.