Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இது போதாது.. தெற்கிலும் தாமரை மலர இதை செய்வோம்' : அமித்ஷா சொன்ன மாஸ்டர் பிளான்

பி.ஜே.பி-யின் 2 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நேற்று தொடங்கியது. தேசிய தலைவர் அமித்ஷா, கூட்டத்தை தொடக்கி வைத்தார். பி.ஜே.பி-யின் 13 மாநில முதல்வர்கள், 45 மத்திய அமைச்சர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  பிரதமர் மோடி, நேற்று மாலை புவனேஸ்வர் வந்தார். அவரை விமான நிலையத்தில் இருந்து தேசிய செயற்குழு கூட்டம் நடந்த அரங்கிற்கு உள்ள 13 கிலோ மீட்டர் தூரத்துக்கும் பி.ஜே.பி தொண்டர்கள் வழிநெடுக நின்று வரவேற்றனர்.

Bjp National executive meeting

பிரதமர் மோடி முன்னிலையில் தேசிய செயற்குழு கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில், '' நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற போது, இதுதான் பி.ஜே.பி-யின் உச்சநிலை வெற்றி என்று சொன்னார்கள். ஆனால், அதோடு நிற்காமல் நாம் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வருகிறோம். நாட்டில் மேற்கிலும் மத்திய பகுதிகளிலும் நாம் பெற்ற வெற்றிகளும், கிழக்கில் அஸ்ஸாமிலும், மணிப்பூரிலும் பெற்ற  வெற்றிகளும் தொடக்க  நிலைதான்.  தெற்கிலும், கிழக்கிலும் நாம்  வெற்றி பெற வேண்டாமா ? அதற்கு நாம், உழைத்து கொண்டே இருக்க வேண்டும். இப்போது 13 மாநிலங்களில் நமது ஆட்சி. இது போதுமா? இன்னும் நாம் நிறைய வெற்றிகளை பெற வேண்டியது இருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் நமது கொடி பறக்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம்? இதுதான் நம்முன் நிற்கும் இப்போதைய கேள்வி? 

சென்ற ஆண்டு தேசிய செயற்குழு கூட்டத்தில் உத்தரப்பிரதேசம்  உட்பட ஐந்து மாநிலத் தேர்தல்களைப் பற்றி தீர்மானம் எடுத்தோம். அதை ஓரளவுக்கு செய்தும் இருக்கிறோம்.  இப்போது, அடுத்து வரவுள்ள இமாச்சலப் பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடக  சட்டமன்றங்களுக்கு தேர்தல்களிலும் இதே போன்ற தீர்மானத்துடன் வேலைசெய்ய வேண்டும். இந்த எண்ணிக்கையில் நமது முதல்வர்கள் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பது இதுவே முதல்முறை.

Bjp National executive meeting

வரும் செப்டம்பருக்குள் தேர்தல் வர இருக்கும் மாநிலத்தில் கட்சியினரை சந்திக்க 95 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன்.  கட்சியின் மூத்தத் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் மாதத்தில் 15 நாட்களை தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் மற்றும் ஒடிஸா போன்ற பி.ஜே.பி பலம் குறைவாக இருக்கும் மாநிலங்களில் செலவிடவேண்டும். தேசிய செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், வாக்குச்சாவடி அளவில் உள்ள நிர்வாகிகளை சந்தித்து கட்சியை பலப்படுத்தும் வேலைகளை செய்ய  வேண்டும்.

 

மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க முடிந்த பி.ஜே.பி-யால் வலுவாக இருக்கும் மாநிலக்கட்சிகளை தோற்கடிக்க முடியாதா? உத்தரப்பிரதேசத்தில் என்ன நடந்தது? மாயாவதி, முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் கணக்குகளை முடித்துவிட்டோம் அல்லவா? இது நம்முடைய திட்டமிட்ட உழைப்பால்தான் முடிந்தது. இடது சாரிகளை கேரளாவிலும், திரிபுராவிலும் தோற்கடித்து ‘தாமரையை மலர’ வைக்க வேண்டும்.

Amit Shah

சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பதால்தான் மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல், பி.ஜே.பி செயல்படும் கட்சியாக இருப்பதால்தான் அறுதி பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் கொடுத்தார்கள். உத்தரப்பிரதேசத்திலும் மகத்தான வெற்றியை தந்தார்கள். சமீபத்தில் நடந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் மாபெரும் வெற்றி கிடைத்திருப்பது மக்கள் நலக் கொள்கைகளை மோடி அரசு மேற்கொண்டதுதான் முக்கிய காரணம். சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் பிரபலமானத் தலைவராக மோடி உருவெடுத்துள்ளார். மோடி அரசின் மூன்றாண்டு சாதனைகளை இதரக் கட்சிகள் இரண்டு-மூன்று முறை ஆட்சியை கைப்பற்றிய போதும் செய்தது கிடையாது. 

 

இது தினதயாள் உபாத்யாவின் நூற்றாண்டு விழா. டெல்லியில் கடந்த முறை நடந்த, தேசிய செயற்குழு கூட்டத்தில் கட்சி பணியாற்ற முழு அர்பணிப்புடைய சேவகர்கள் தேவை என்று அழைப்பு விடுத்து இருந்தோம். அதன்படி 2,470 பேர் ஓராண்டு முழு நேர ஊழியர்களாகவும் 1,441 பேர் ஆறு மாதத்திற்கும் 3,78,000 பேர் 15 நாட்களுக்கு பணி செய்யவும் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளார்கள். பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை பி.ஜே.பி ஆட்சி செய்யும் பொற்காலம் மலர இருக்கிறது. பி.ஜே.பி இதுவரை பலம் பெறாத மாநிலங்களில் பலம் பெறுவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இப்போது கிடைத்துள்ள வெற்றிகளைக் கொண்டு நாம் திருப்தி அடையக்கூடாது'' என்று பேசினார்.

இன்று, 2-வது நாள் கூட்டம் நடக்கிறது. இதில், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. நிறைவாக பிரதமர் மோடி பேசுகிறார்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement