வெளியிடப்பட்ட நேரம்: 12:49 (17/04/2017)

கடைசி தொடர்பு:13:10 (17/04/2017)

நேபாள பெண் அதிபரின் முதல் வெளிநாட்டுப் பயணமே இந்தியாதான்!

நேபாள அதிபர் பித்யா தேவி பந்தாரி, முதல் வெளிநாட்டுப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். ஐந்து நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் அழைப்பின்பேரில் இந்தியா வருகிறார்.

Nepal president

கடந்த ஆண்டு, நேபாளத்தில் உள்ள மாதேசி சமூகத்தினரால் இரு நாட்டு உறவுகளுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசலை, நேபாள அதிபரின் வருகை சமன் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாதேசி சமூகத்தினர், தங்களுக்கும் அரசியல் பிரதிநிதித்துவம் கோரிவருகின்றனர். இவர்களின் போராட்டத்தால், இந்திய-நேபாள உறவு கடந்த ஆண்டு சிறு விரிசலைச் சந்தித்தது. இதை ஈடுகட்டும் விதமாக, ஆறு மாத காலமாக இந்தியத் தலைவர்களும் நேபாளத் தலைவர்களும் மாறி மாறி வருகை புரிகின்றனர்.

தற்போது, நேபாள அதிபர் பித்யா தேவியின் வருகை, இந்திய- நேபாள உறவை மேம்படுத்தும் என இருநாட்டு அரசு வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. நேபாள அதிபரின் வருகையையொட்டி, நேபாளத்தில் இன்றும், அவர் நாடு திரும்பும் ஏப்ரல் 22-ம் தேதியும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள அதிபர் சுற்றுப்பயணம் மேற்கொண்டால், நேபாளத்தில் அந்த நாள், அரசு விடுமுறையாக அறிவிக்கப்படுவது மரபு என்பது குறிப்பிடத்தக்கது.