வெளியிடப்பட்ட நேரம்: 13:24 (17/04/2017)

கடைசி தொடர்பு:14:18 (17/04/2017)

அக்காவைத் தொடர்ந்து தம்பி! அசத்திய ஹைதராபாத் சிறுவன்

ஹைதராபாத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன்,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் வகுப்பில் தேர்வாகி உள்ளான்.

hyderabad boy

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர், 11 வயது சிறுவன் அகஸ்தியா ஜெய்ஸ்வால். அந்த மாநிலத்திலேயே 11 வயதில் பிளஸ் 2 தேறிய முதல் சிறுவன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். காமர்ஸ், பொருளாதாரம் மற்றும் சிவிக்ஸ் பாடத்தை முதன்மையாகக்கொண்டு 63 சதவிகித மதிப்பெண்ணில் தேர்வாகி உள்ளார். தற்போது, காமர்ஸ் பாடத்தை முதன்மைப் பாடமாகக்கொண்டு படித்த அகஸ்தியாவுக்கு பி.காம் படிக்க வேண்டும் என்பதுதான் லட்சியமாம். ஆனால், டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் கனவு என்றும் கூறுகிறார் அகஸ்தியா.

பி.காம் படித்தால் எப்படி டாக்டராக முடியும் எனக் குழம்புவோருக்கு, பதில் வைத்துள்ளார் அகஸ்தியா. அதாவது, 17 வயதில்தான் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு எழுத முடியுமாம். அதனால், 17 வயதுக்குள் பி.காம் படித்து முடித்துவிட்டு, மீண்டும் உயிரியல் பாடத்தை முதன்மையாகக் கொண்டு, பிளஸ் 2 தேர்வெழுதி, எம்.பி.பி.எஸ். படித்து டாக்டர் ஆவேன் எனக் கூறுகிறார் அகஸ்தியா.

ஆசியாவிலேயே முதன்முதலாக எட்டு வயதில் 10-ம் வகுப்பும், 10 வயதில் பிளஸ் 2 -வும் முடித்து, 13 வயதில் ஆசியாவின் இளம் இதழியல் பட்டதாரியாகப் பட்டம் பெற்று, அரசியல் அறிவியலில் முதுகலை முடித்து, தன்னுடைய 17 -வது வயதில் விளையாட்டு மேம்பாடு குறித்து பி.ஹெச்டி என்னும் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டுவருகிறார், அகஸ்தியாவின் அக்கா.