'கணவனை இழந்த பெண்கள் இந்த கோயிலுக்குள்ள வரக் கூடாதாம்!' - புதுச்சேரி சச்சரவு

பாதிக்கப்பட்ட புதுச்சேரி பெண்

கோயில் கால்கோல் விழாவுக்கு கணவனை இழந்த பெண்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று தடை விதித்ததோடு, பெண்களையும் தாக்கிய அருவருக்கத்தக்க சம்பவம் புதுச்சேரியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 

புதுச்சேரி உருளையன்பேட்டை புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரில் சுப்பையா நகரில் அமைந்துள்ளது, சொர்ணமுத்து மாரியம்மன் திருக்கோயில். குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு குடமுழுக்கு பணிகள் நடந்துவருகிறது. அதற்கான நிதி திரட்டும் வேலையில் இறங்கியது கோயில் அறங்காவலர் குழு. இந்தக் கோயிலுக்கு எதிரே இருக்கும் வீட்டில் குடியிருப்பவர் ஜெயலட்சுமி(ஐம்பது வயது), கணவனை இழந்தவர். கடந்த 15-ம் தேதி இவரது வீட்டுக்குச் சென்ற அறங்காவலர் குழுவினர், கோயில் திருப்பணிக்கு 25,000 ரூபாய் நன்கொடை கேட்டுள்ளார்கள். இரண்டு நாட்களில் தருவதாக ஜெயலட்சுமி கூறியுள்ளார். 

இந்த நிலையில் இன்று (17.04.2017) ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்ற கோயில் தலைவருடன், அதே பகுதியில் குடியிருக்கும் ஓய்வுபெற்ற போலீஸ் எஸ்.ஐ ஒருவரும் சென்றுள்ளார். “நீங்கள் பணம் கொடுங்கள். ஆனால், கோயிலுக்குள் விதவைகள் வரக்கூடாது” என்று கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட புதுச்சேரி பெண்

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி, “என் பணம் மட்டும் வேண்டும். நான் கோயிலுக்கு வரக்கூடாதா?'' என்று கேட்டுள்ளார். அதற்கு ஏளனமாகப் பதிலளித்ததோடு ஜெயலட்சுமியைத் திட்டித் தீர்த்துள்ளார்கள். இதில் மனமுடைந்த ஜெயலட்சுமி அழுதுகொண்டே வீட்டுக்குள் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் அதே பகுதியில் குடியிருக்கும் கணவனை இழந்த மற்றொரு பெண்ணான பூமாதேவி, ”என்னிடமும் பணம் கேட்டார்கள். ஆனால், கோயிலுக்குள் வரக்கூடாது என்று சொன்னார்கள்'' என்று ஜெயலட்சுமியிடம் அழுதுகொண்டே சொல்லி இருக்கிறார். இதைப் பற்றி கோயில் நிர்வாகத்திடம் முறையிட பூமாதேவியை அழைத்துச்சென்ற ஜெயலட்சுமியை, அறங்காவலர் குழுவைச் சார்ந்தவர்கள் தாக்கியிருக்கிறார்கள். 

இதுபற்றி நம்மிடம் பேசிய ஜெயலட்சுமி, ”என் வீட்டுக்காரர் கவர்ன்மெண்ட் பஞ்சாலையில் பெரிய பதவியில் இருந்தவர். மூன்று வருஷத்துக்கு முன்னாடி நெஞ்சுவலியில் செத்துட்டார். என் மூன்று பசங்களும் நல்லா படிச்சவங்க. கோயில்காரங்க என்கிட்ட 25,000 பணம் கேட்டதுக்கு, 'நல்ல காரியம்தானே? பசங்கக்கிட்ட கேட்டு தரேன்'னு சொன்னேன். ஆனால், இன்னைக்கு 'நீ விதவை. முண்டச்சிகள் எல்லாம் கோயிலுக்குள் வரக்கூடாது'னு அசிங்கமா பேசி அடிச்சாங்க. அப்புறம், அவங்களே மன்னிப்பும் கேட்டதால விட்டுட்டோம். ஆனால், கோயில் வாசல்ல சுமங்களிகள் மட்டுமே உள்ளே வரணும்னு போர்டு வெச்சாங்க. காலேஜ் படிக்கிற என் பொண்ணு இதைப் பத்தி கேட்கப் போனதுக்கு அவளையும் அடிச்சுட்டாங்க. உடனே நான் போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கப்போனேன். ஆனால், என்னை அடிச்ச கோயில்காரங்களில் ஒருத்தரான ராஜாராமன், ரிட்டையர்டு போலீஸ்காரர். அதனால், எங்களை சமாதானப்படுத்தி அனுப்பிட்டாங்க. அப்புறம், கோயில்காரங்க கம்ப்ளைண்ட் கொடுத்தாங்கனு என் பையனை போலீஸ் புடிச்சி வெச்சிருக்கு. ஏம்பா வூட்டுக்காருங்க செத்துட்டா பொம்பளைங்களும் செத்துடணுமா? அவங்க எந்த நல்ல விஷயத்திலும் வரக் கூடாதா? அப்படி என்னப்பா பொம்பளைங்க பாவம் பண்ணிட்டாங்க?'' என்று கலங்கினார். 

பாதிக்கப்பட்ட புதுச்சேரி பெண்

மற்றொரு பெண்ணான பூமாதேவி, “என் வூட்டுக்காரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி உடம்பு முடியாம செத்துட்டார். ஒன்பதாவதும் பத்தாவதும் படிக்கிற பசங்களோடு இருக்கேன். கோயில்காரங்க என்கிட்ட 15,000 கேட்டாங்க. என்னால் அவ்வளவு தர முடியாதுனு சொன்னதுக்கு, கொஞ்ச கொஞ்சமா கொடுனு சொன்னவங்க, 'கோயிலுக்குள்ளே வந்து எதையும் தொடாதே. ஓரமா நின்னுட்டுப் போயிடு'னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப அவமானமா போயிடுச்சு. அதுக்கப்புறம் கோயில் வாசலில் போர்டு வெச்சதைப் பார்த்து, போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கப்போனதும் அந்த போர்டையே எடுத்துட்டாங்க” என்றார் கொதிப்புடன்.

இந்தத் தகவலை கேள்விப்பட்ட ஊர்மக்களில் ஒரு பகுதியினர் ஜெயலட்சுமியையும் பூமாதேவியையும் அழைத்துக்கொண்டு மீண்டும் உருளையன்பேட்டை காவல் நிலையத்துக்குப் புகார் அளிக்கச் சென்றனர். ஆனால் ஒட்டுமொத்த காவல் நிலையமும் குற்றவாளிக்கு ஆதராகவே வரிந்துகட்டி வேலை செய்துள்ளது. ஊர்மக்களை மிரட்டி வெளியேற்றியதோடு, கடைசி வரை வழக்குப் பதிவுசெய்யாமல் ’சமரசம்’ செய்து அனுப்பியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரைக் கைது செய்து அவரைப் பிணைக் கைதிபோல பயன்படுத்தி, மற்றவர்களைப் பயமுறுத்தி வழக்குப் பதிவுசெய்யாமல் தடுத்துள்ளது. 

ஒட்டுமொத்த சமுதாயமும் வெட்கி தலைகுனிய வேண்டிய சம்பவம் இது. இந்த விஷயத்தில் புதுச்சேரி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? 

-ஜெ.முருகன் 

படங்கள்: அ.குரூஸ்தனம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!