அத்வானியிடம் மீண்டும் விசாரணை! பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.க மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் விடுவிக்கப்பட்டுள்ளார்.

advani

உத்தரப்பிரதேசத்தில், 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி, டிசம்பர் 6, 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மதக் கலவரங்களும் நடந்தன. தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 21 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் ரேபரேலி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை உறுதிசெய்த நிலையில், விடுவிப்பை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிடுவதை எதிர்த்து, சிபிஐ தாக்கல்செய்த மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. அதன்படி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. கல்யாண் சிங் விடுவிக்கப்பட்டுள்ளார்.

25 வருடங்களாக நடந்துவரும் இந்த வழக்கில், கால வரையறையுடன்கூடிய விசாரணையை இன்னும் இரண்டு ஆண்டு காலங்களில் முடிக்க வேண்டுமென நீதிபதிகள் பி.சி.கோஷ் மற்றும் நாரிமன் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய பா.ஜ.க மூத்த தலைவர்கள் உள்பட 21 பேரில், தற்போது 18 பேர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போதைய ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங் மீதான வழக்கு கைவிடப்பட்டது. மேலும், மறைந்த சிவ சேனா தலைவர் பால் தாக்கரே மற்றும் விஹெச்பி தலைவர் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் ஆகிய இருவரும் காலமானதால், அவர்கள் மீதான வழக்கு தள்ளுபடிசெய்யப்பட்டது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!