வெளியிடப்பட்ட நேரம்: 12:23 (19/04/2017)

கடைசி தொடர்பு:12:22 (19/04/2017)

கல்வி உரிமைச் சட்டம் : எல்.கே.ஜி அட்மிஷனில் இதுதான் நடக்கிறது! #MustRead #3MinsRead

பள்ளிகள்

சென்னையில் மட்டுமல்ல; தமிழகம் முழுவதுமே தனியார் மெட்ரிக் பள்ளிகளில் எல்.கே.ஜி அட்மிஷன் வாங்குவது குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் நன்கொடை கொடுத்தோ, அதிகாரத்தைச் செலுத்தியோ அட்மிஷன் வாங்கி விடுகிறார்கள். பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களின் பிள்ளைகளால் அத்தகைய பள்ளிகளுக்குள் காலடி எடுத்து வைக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. இந்த நிலைமையை உடைக்க, பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடத்திய பின்னர், கடந்த 2009-ம் ஆண்டு இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. அனைத்து தனியார் பள்ளிகளிலும் எல்.கே.ஜி அட்மிஷனில் 25 சதவிகித இடஒதுக்கீட்டை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அந்தச் சட்டம் ஆகும். அதன்படி, தமிழகத்தில் 2013-2014-ம் கல்வி ஆண்டில் இருந்து, ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், அதில் ஏராளமான தில்லுமுல்லுகள் அரங்கேறி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்த அட்மிஷன்களை முறைப்படி நடத்த தற்போது தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், துறை செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 2017-18-ம் கல்வி ஆண்டில் மாநிலம் முழுவதும் உள்ள 9,000 தனியார் சுயநிதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, மெட்ரிக் பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்பில் (நுழைவு நிலை வகுப்பு) 25 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் 1,26, 262 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர் தங்களின் குழந்தைகளின் பெயர், முகவரி போன்ற விவரங்களை தங்களின் இருப்பிடத்தில் இருந்தவாறே பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்ட விபரம், பெற்றோரின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்குக் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆய்வாளர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திட, உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தவிர, மாநிலம் முழுவதும் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட அரசு இ-சேவை மையங்களிலும், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

பள்ளிகள்

விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்: பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் (அசல்), நலிவடைந்த பிரிவினரில் இதர வகுப்பினரின் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்குள் இருப்பின் அவர்களின் வருமானச் சான்று (அசல்), பள்ளிக்கும், மாணவர் வசிக்கும் இடத்திற்கும் இடையேயான தொலைவு ஒரு கிலோ மீட்டர் முதல் ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருத்தல் வேண்டும். (வருவாய்த் துறையினரால் அளிக்கப்பட்டுள்ள இருப்பிடச்சான்று, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை (இவற்றுள் ஏதேனும் ஒன்றின் அசல்). இந்த ஆவணங்களுடன் சென்றால் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பதிவு செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம். 

ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்படின் வெளிப்படையான முறையில் குலுக்கல் நடத்தி மாணவர் தேர்வு செய்யப்படுவர். அந்தந்த பள்ளிகளில் குறிப்பிட்ட நாள் அன்று நடத்திடும் குலுக்கல் நிகழ்வுகளை கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் நியமிக்கும் இதர அரசுத் துறை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். 

வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஆதரவற்றோர், எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம் இருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே முன்னுரிமை அளித்து சேர்க்கை வழங்கப்படும்.

மாவட்ட வாரியாக, தனியார் சுயநிதிப் பள்ளிகளின் பட்டியல் மற்றும் அப்பள்ளிகளின் 25 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 20-ம் தேதியில் இருந்து மே 18-ம் தேதி வரை இணைய வழியில் எல்.கே.ஜி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

-எஸ்.முத்துகிருஷ்ணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்