வெளியிடப்பட்ட நேரம்: 20:03 (20/04/2017)

கடைசி தொடர்பு:09:28 (21/04/2017)

பணமதிப்பு நீக்க நடவடிக்கை: விளக்கமளிக்க உர்ஜித் படேலுக்கு மீண்டும் அழைப்பு

பணமதிப்பு நீக்க  நடவடிக்கைகுறித்து விளக்கமளிக்க, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலை பாராளுமன்றக் குழு மீண்டும் அழைத்துள்ளது.

உர்ஜித் படேல்

பாராளுமன்றக் குழுவின் அழைப்பின் பெயரில், ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல், மே 25-ம் தேதி பணமதிப்பு நீக்கம் குறித்து விளக்கம் அளிக்க உள்ளார். இதற்கு முன்னர், குழு உறுப்பினர்களுக்கு பணமதிப்பு நீக்கம் குறித்து, கடந்த ஜனவரி மாதம் விளக்கமளித்தார்.

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் மன்மோகன் சிங் இந்தக் குழுவில் உள்ளார். இவரின் வற்புறுத்தலின் பெயரிலேயே தற்போது உர்ஜித் படேல் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் நடந்த விளக்கக் கூட்டம், முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி தலைமையில் நடந்தது. அப்போது ஏற்பட்ட விவாதங்களும் அதன் தாக்கங்களும் அதிகம்.

தற்போது, குழு உறுப்பினர்களின் கேள்விகள் அதிகம் இருப்பதால், ரிசர்வ் வங்கி கவர்னரை மீண்டும் அழைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி குழுவினர், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் சேர்ந்துள்ள பணம் குறித்தும், வங்கி நடைமுறைகள் எப்போதிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பதுபோன்ற கேள்விகளை முன்வைக்க உள்ளனர்.