வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (21/04/2017)

கடைசி தொடர்பு:12:54 (21/04/2017)

ஆதாரை கட்டாயமாக்கியது ஏன்? மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் காட்டம்!

'ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என்று உத்தரவிட்டும் அதனை மீறியது ஏன்?' என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது. ஆதார் எண்ணைப் பல திட்டங்களுக்கு கட்டாயமாக்கியது ஏன் என்றும் வினா எழுப்பியுள்ளது.

ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயப்படுத்திவருவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், பாப்பே, நாகப்பன் அடங்கிய அமர்வு, 'அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் அட்டை கட்டாயம் இல்லை' எனத் தீர்ப்பளித்தது.

அதேநேரத்தில், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் ரேஷன் பொருள்களை வாங்குவதற்கு மட்டுமே ஆதார் அட்டையைப் பயன்படுத்த வேண்டும் என்றும், இருப்பினும் அதுவும் கட்டாயமில்லை' என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

'ஆதார் இல்லை என்பதற்காக அரசின் சலுகைகளை மறுக்கக்கூடாது' எனக் கூறிய நீதிபதிகள், ஆதார் அட்டைகளுக்காக சேகரிக்கப்படும் தனி மனிதத் தகவல்களை வெளி நபர்களுக்கு வழங்கக்கூடாது என்றும், குற்ற வழக்குகளின் விசாரணைக்கு மட்டும் ஆதார் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளலாம் என்றும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயப்படுத்திவருவதாக உச்சநீதிமன்றத்தில் இன்று முறையீடுசெய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 'ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என்று உத்தரவிட்டும் அதனை மீறியது ஏன்' என்றும், ஆதார் எண்ணைப் பல திட்டங்களுக்கு கட்டாயமாக்கியது ஏன்?' என்றும் மத்திய அரசுக்கு காட்டமாகக் கேள்வி எழுப்பியது.

அப்போது, ஆதார் எண் இருந்தால் மட்டுமே சட்டவிரோத பணப்பரிமாற்றத்தைத் தடுக்க முடியும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.