வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (21/04/2017)

கடைசி தொடர்பு:13:09 (21/04/2017)

“அருணாச்சல பிரதேசத்தை சீன பகுதி எனக் குறிப்பிடு!” கூகுளுக்கு பீஜிங் நெருக்கடி

கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சீனா நெருக்கடி!

லாய் லாமாவின் அருணாச்சல பிரதேச பயணத்துக்குப் பிறகு, இந்தியா - சீனா உறவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் அளவிலான கூட்டம் நடத்த மறுப்பு, அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என அறிவித்தது, அருணாச்சல பிரதேசத்தின் ஆறு நகரங்களுக்குப் பெயரை மாற்றியது என இந்தியா மீதான தன்னுடைய வெறுப்பை வெவ்வேறு வகையில் சீனா வெளிப்படுத்தி வருகிறது.

இந்தியாவில் இருக்கும் நகரங்களின் பெயரை மாற்றி அறிவிப்பு வெளியிட்ட சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. "பக்கத்து வீட்டுக்கு வேறு ஒரு பெயரை வைத்துவிட்டு ஆக்கிரமிப்பு செய்தால், அது சட்டப்பூர்வமாக மாறிவிடாது. பெயரை மாற்றுவதால், அந்தப் பகுதியில் இந்தியாவுக்குள்ள உரிமையை எந்த விதத்திலும் மாற்றிவிட முடியாது" என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர், சற்று எச்சரிக்கையுடன் கூடிய வகையில் பதில் அளித்திருந்தார்.

அருணாச்சலபிரதேசம் அரசு முத்திரை

சீனா தன்னுடைய அடாவடித்தனத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. கூகுள் வரைபடத்தில், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அருணாச்சல பிரதேசத்தைக் காட்டக்கூடாது. அதற்குப் பதில், அதைச் சீனாவின் பகுதியாக, தெற்கு திபெத் என்று காட்ட வேண்டும் என்று சீனா அறிவுறுத்தியுள்ளதாம். கூகுள் மட்டுமல்ல... சர்வதேச இணைய நிறுவனங்கள், தேடுபொறி (சர்ச் இன்ஜின்) வைத்துள்ள இணைய நிறுவனத்துக்குச் சீனாவிடமிருந்து இந்த அறிவுறுத்தல் சென்றுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல், ஆறு நகரங்களுக்குப் புதிதாக வைக்கப்பட்ட பெயர் மற்றும் அதற்கு ஏற்ற ஆங்கில எழுத்துக்களையே இணைய வரைபடங்களில் காட்ட வேண்டும் என்றும் சீனா கூறியுள்ளதாம்.

இதுகுறித்துச் சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரிடம் நிருபர்கள் கேட்டபோது, "தலாய் லாமா வருகையால் சீனா இந்த முடிவை மேற்கொள்ளவில்லை. பண்டைக்காலம் தொட்டே சீனாவுக்கு உள்ள உரிமையை நிலைநாட்டவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சீனாவில் உள்ள அனைத்து நகரங்கள், பகுதிகளுக்குமான சீன பெயர் மற்றும் அதற்கு ஏற்ற ஆங்கில வார்த்தைகளைத் தகுதிப்படுத்தி வருவதன் ஒரு பகுதியாகத்தான் அருணாச்சல பிரதேச நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. விரைவில், மேலும் பல பகுதிகளுக்கான சரியான பெயர்கள் அறிவிக்கப்படும்" என்றார். 

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, சீனப் பேரரசின் கீழ் திபெத் இருந்ததாம். திபெத்தின் ஒரு பகுதியாக அருணாச்சல பிரதேச இருந்தது என்பது சீனாவின் கருத்து. இதனால், ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட திபெத் முழுவதும் சீனாவுக்குத்தான் சொந்தம் என்று கூறிக்கொண்டு, இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்துக்கும் அது உரிமை கோருகிறது. அருணாச்சல பிரதேசம் திபெத்தின் ஒருபகுதி என்பதற்கு ஆதாரம், திபெத்திய புத்த மதத்தின் ஆறாவது தலாய் லாமா பிறந்தது அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் நகரில்தான். திபெத்தியர்களின் இந்தப் புனித நகரம், பண்டைக்காலத்தில் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது என்று சீனா கூறுகிறது. இந்தக் கருத்தை இந்தியா ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்று சீனா வலியுறுத்துகிறது.  அதாவது, அருணாச்சல பிரதேசத்தை சீனாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறது அந்நாடு.

தவாங்

இதனால்தான், அருணாச்சல பிரதேசத்துக்குள் தலாய் லாமா செல்லக்கூடாது, அருணாச்சல பிரதேச மக்கள், சீனா செல்வதற்கு பாஸ்போர்ட் மற்றும் விசா தேவையில்லை என்பது போன்ற சர்ச்சைகளை அவ்வப்போது சீனா உருவாக்கி வருகிறது. தற்போது, இந்தியப் பகுதிகளில் தனக்குள்ள உரிமையை நிலைநாட்ட, வரைபடம் ரீதியிலான போரில் சீனா இறங்கியுள்ளது. சர்வதேச அளவில் தனக்குள்ள வலிமையை வைத்து, இதை சீனா நிறைவேற்று முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தடுக்க இந்தியா என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்று தெரியவில்லை. 

சீனாவின் நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் பாகிஸ்தான் 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுடன்தான் இருந்தது. இந்திய சுதந்திரத்துக்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம் என்ற நாடுகளே இல்லை. அதனால், இந்த நிலப்பரப்பு எல்லாம் இனி இந்தியாவுக்குச் சொந்தம் என்று இந்தியா அறிவித்தால், அதைச் சீனா ஏற்றுக்கொள்ளுமா? மேலும், இதிகாச காலத்தில், தற்போதைய ஆப்கானிஸ்தான், சீனாவின் பெரும்பகுதி போன்றவை பாரதமாகக் கருதப்பட்டது. இதை ஆதாரமாக வைத்து, இவற்றை எல்லாம் சீனா இந்தியாவுக்கு அளிக்க ஒப்புக்கொள்ளுமா? ஒரு காலத்தில், ஜப்பான் மன்னராட்சியின் கீழ் சீனா இருந்திருக்கிறது. இதற்காகச் சீனா, ஜப்பானுக்கு உட்பட்டது என்று தெரிவித்தால், அதை சீனா ஏற்றுக்கொள்ளுமா? என இந்திய ராணுவ விவகாரங்களைக் கவனிக்கும் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். நாளுக்கு நாள், இந்தியா மீதான சீனாவின் கோபம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பிரச்னை எங்குபோய் முடியுமோ! 


டிரெண்டிங் @ விகடன்