Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அணிகள் இணைப்புக்கு முட்டுக்கட்டை போடும் புகழேந்தி யார்?

புகழேந்தி

''ன்னீர்செல்வம் கட்சி பொதுச் செயலாளரானால், அவருக்கு எதிராக நான் களம் இறங்குவேன்'' என அனைவரையும் கலங்கடித்துக் கொண்டிருக்கிறார். பெங்களூருவைச் சேர்ந்த புகழேந்தி. 

யார் இந்த பெங்களூரு புகழேந்தி?

கள்ளக்குறிச்சியில் கடவுள் நம்பிக்கையான குடும்பத்தில் பிறந்தவர் வாசு நாயுடு. பின்வந்த நாட்களில் பெரியாரின் கொள்கையின் மீது அதீதப் பற்று ஏற்பட்டதால் திராவிடர் கழகத்தில் இணைந்தார். வாசு சிறந்த பேச்சாற்றல் உடையவராகத் திகழ்ந்ததால் திராவிடர் கழகத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் ஆனார். 

தமிழகம் முழுவதும் பெரியாரின் கொள்கைகளைப் பட்டிதொட்டியெல்லாம் எடுத்துச் சென்றார். வாசுவின் பேச்சை பெரியாரே ரசித்துக் கேட்கும் அளவுக்கு உயர்ந்தார். நாயுடு வாசு என்ற பெயர் மறைந்து தி.க.வாசு என்றால் தமிழகம் முழுவதிலும் அறியப்படும் பெயராக மாறியது. கொள்கையைப் பேச்சளவில் மட்டும் அல்லாமல் வாழ்க்கையிலும் கடைப்பிடித்து தன் சொந்த சாதியில் திருமணம் செய்யாமல் இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த ராஜம் என்ற பெண்ணை பெரியார் தலைமையில் திருமணம் செய்தார். 

தி.க.வாசுவுக்கும், ராஜம் அம்மையாருக்கும் பிறந்த மூத்த மகன்தான் இந்தக் கட்டுரையின் நாயகன் புகழேந்தி. இவர்கூடப் பிறந்தவர்கள் 2 தம்பிகளும், 2 தங்கைகளும். 10-வது வரை படித்த புகழேந்தி சென்னையில் டி.வி ஷோரூமில் வேலை பார்த்தார். இந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதா அ.தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளரானதோடு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியின் கொள்கைகளைப் பரப்புரை செய்துவந்தார். புகழேந்திக்கு ஜெயலலிதா மீது அதீத பாசம் ஏற்படவே ஜெயலலிதா கலந்துகொள்ளும் கூட்டங்கள் அனைத்திலும் இளைஞரான புகழேந்தி மக்களோடு மக்களாக இருந்து ஜெயலலிதாவின் உரையைக் கேட்பார். 

அதன்பிறகு பெங்களூருவுக்குச் சென்று சொந்தமாக ஒரு டி.வி ஷோரூம் நடத்தினார். பிறகு சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த சக்கரபாணியின் மகள் குணஜோதியைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு சங்கீதன், ஜெயசிம்மன் என்ற இரண்டு மகன்கள் பிறந்தார்கள். 2008-ல் தர்ஷினி என்ற பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். கர்நாடக அ.தி.மு.க கட்சியிலும் தன்னை இணைத்துக்கொண்டார். கர்நாடகாவில் கட்சிப் பொறுப்புகளில் இருந்தவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆரின் விசுவாசிகளாக இருந்தவர்கள். புகழேந்தி, ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்ததால் கர்நாடக மாநில பேரவைச் செயலாளராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். இவர் தீவிர களப்பணி ஆற்றியதால் குறுகிய காலத்திலேயே கர்நாடக மாநில கழகச் செயலாளர் ஆனார். அதன் பிறகு தன்னுடைய ஒவ்வொரு திருமண நாளின்போதும் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்துப் பெறுவார்.  

2001-ல் காவிரி கலவரத்தின்போது கன்னட வெறியர்கள் புகழேந்தியின் வீட்டுக்குள் புகுந்து தாக்கினார்கள். உடனே தி.மு.க தலைவர் கருணாநிதி பகிரங்கமாகவே புகழேந்தியின் வீட்டைத் தாக்கிய கன்னடர்களைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். ஜெயலலிதா நேரடியாக கர்நாடக முதல்வரிடம் பேசி புகழேந்தியின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு கொடுக்கச் சொல்லி வலியுறுத்தினார். இதனால் ஜெயலலிதாவிடம் நல்ல அறிமுகம் ஆனார். 

புகழேந்தி

அதையடுத்து 2006 முதல் 2011 வரை அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு கிராமப்புறத்திலும் குடிநீரைச் சுத்திகரிப்பு செய்ய மிஷின்கள் பொருத்துவதற்கு டெண்டர் விடப்பட்டது. அதில் புனேவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு புகழேந்தி டெண்டர் எடுத்துத் தருவதாகச் சொல்லி 3 கோடி ரூபாய் பெற்றதாகவும் ஆனால், அந்த டெண்டர் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் புனே நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது அந்த நிறுவனம். அந்தச் செய்தியைப் பிரபல நாளிதழ் ஒன்று ‘‘கர்நாடக அ.தி.மு.க மாநிலச் செயலாளர் 3 கோடி வாங்கிக்கொண்டு தலைமறைவானார்’’ என்று செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து கர்நாடக மாநிலச் செயலாளர் பதவியை ஜெயலலிதா பறித்தார். ஆனால், புகழேந்தி அந்த நாளிதழ் மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தார். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால், அந்த நாளிதழ் ஆசிரியர் கோர்ட்டில் ஆஜராகாததையடுத்து... நீதிபதி, ‘‘ 'புனே நீதிமன்றமே புகழேந்தி பணம் வாங்கவில்லை' என்று தீர்ப்பு அளித்திருக்கிறது. எதன் அடிப்படையில் செய்தி போட்டீர்கள்'' என்று விளக்கம் கேட்பதற்காகப் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அந்த இதழ் ஆசிரியர் நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் உத்தரவிடுகிறேன்’’ என்றார்.  

இதையடுத்து புகழேந்தியிடம் அந்த நாளிதழ் சமரசம் ஆனது. இது ஜெயலலிதாவுக்குத் தெரியவர மீண்டும் புகழேந்தியைக் கர்நாடக மாநிலச் செயலாளர் ஆக்கியதோடு கர்நாடாகாவில் நடந்துவரும் தனது சொத்துக் குவிப்பு வழக்கையும் கவனித்துக்கொள்ள ஜெயலலிதா வாய்மொழி உத்தரவிட்டார். இதனால் அ.தி.மு.க தலைமைக்கு மிகவும் நெருக்கம் உடையவராக இருந்தார். 

அதையடுத்து நீதிமன்றத்தின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து தலைமைக்குச் சொல்லும் ஆற்றல் படைத்தவராகத் திகழ்ந்தார். நீதிமன்றத்துக்குப் பள்ளிகூட மாணவனைப்போல காலை 10 மணிக்கு வந்து மாலை 5 மணிக்கு கிளம்பிச் செல்வார். நீதிமன்றத்துக்கு வரும் ஒவ்வொரு நாளும் தமிழக அரசியல்வாதிகளைப்போலவே தனக்கான ஒரு படை பலத்துடனேயே வருவார். 

2014 கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள் மீண்டும் வெளியே வருவதற்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஜாமீன் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் ஜெயலலிதாவுக்குப் புகழேந்தியின் மனைவி குணஜோதியும், இளவரசிக்குப் புகழேந்தியும் ஜாமீன் கையெழுத்து போட்டார்கள். சசிகலா, சுதாகரனுக்கு புகழேந்தியின் நண்பர்கள் மூலமாக ஜாமீன் கையெழுத்துப் போடவைத்தார். 

இதன்மூலம் சசிகலா குடும்பத்துக்கும் நெருக்கமானார். தற்போது சசிகலாவின் அசைக்க முடியாத நம்பிக்கை தூண்களில் இவரும் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். அதனால் பன்னீருக்கு பதிலளிக்க புகழேந்தியையே சசிகலா தரப்பு பயன்படுத்தி வருகிறது. 

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement