வெளியிடப்பட்ட நேரம்: 14:51 (23/04/2017)

கடைசி தொடர்பு:14:51 (23/04/2017)

இனி பாஸ்போர்ட் பெற ஹிந்தி மொழியிலும் விண்ணப்பிக்கலாம்!

பாஸ்போர்ட் பெறுவதற்கு ஹிந்தி மொழியிலும் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. ஹிந்தி மொழி பயன்பாடுகள் குறித்த பரிந்துரைகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை தொடங்கியுள்ளது.  

அரசுத் துறை சார்ந்த இடங்களில் ஹிந்தி மொழியை பயன்படுத்துவது குறித்து 2011-ம் ஆண்டில் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளில் பலவற்றிற்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து பாஸ்போர்ட் பெறுவதற்கு ஹிந்தி மொழியிலும் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகளை வெளியுறவுத் துறை அமைச்சகம் செய்து வருகிறது.

இனிமேல் புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பத்தை ஹிந்தி மொழியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹிந்தி மொழியில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின்னர் அதனை இணையதளத்தில் அப்லோடு செய்து கொள்ளலாம். ஆனால் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட ப்ரிண்ட் அவுட் பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஏற்கப்படமாட்டாது. தூதரகங்கள் மற்றும் பாஸ்போர்ட் தொடர்பான அலுவலகங்களில் ஹிந்தி மொழிக்கான அதிகாரிகளை நியமிப்பதற்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.