ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திடமிருந்து விருது பெற்றார் அமீர்கான்!

'ங்கல்' படத்தில் சிறப்பாக நடித்த அமீர் கானுக்கு, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் விருது வழங்கி, அவரைக் கௌரவித்துள்ளார். 

மோகன் பகவத்திடம் விருது பெறும் அமீர்கான்

கடந்த 2015-ம் ஆண்டு, `நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது' எனக் கூறி, சர்ச்சையில் சிக்கினார் பாலிவுட் நடிகர் அமீர்கான். பல்வேறு இந்துத்துவ அமைப்புகள், அமீர் கானுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்தன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், ''இந்தியாவில் சகிப்பின்மை குறைந்துவிட்டதாக அமீர் கான் கருதினார் என்றால், அவர் பாகிஸ்தானில் குடியேறலாம்'' என கருத்து தெரிவித்தார். இந்துத்துவ அமைப்புகளோ, அமீர் கானின் படங்களைப் புறக்கணிக்க வேண்டுகோள்விடுத்தன.  ஒருகட்டத்தில் அமீர் கானின் மனைவி கிரண் ராவ், 'இந்தியாவைவிட்டு வெளியேறிவிடலாமா?'  என தன்னிடம் கேட்டதாக அமீர் கான் கூறினார். 

இந்தச் சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, அமீர் கானுடன் ஆர்.எஸ்.எஸ் ராசியாகிவிட்டது. காரணம், 'டங்கல்' திரைப்படம். 2016-ம் ஆண்டு அமீர் கான் நடிப்பில் வெளியான 'டங்கல்' படம் சக்கைப்போடுபோட்டது. `டங்கல்' படம், பெண் குழந்தைகளை மல்யுத்த வீராங்கனைகளாக்கும் கதை. `பெண் குழந்தைகளுக்கான எதிர்காலத் திட்டங்கள், வறுமைச் சூழ்நிலையில் உருவாகும் விளையாட்டு வீராங்கனைகளை உருவாக்குவது எப்படி?' என்பது போன்ற அம்சங்களோடு மல்யுத்தக் காட்சிகள் மிகச்சிறப்பான முறையில் படமாக்கப்பட்டிருக்கும். இதனால் பெண்களையும் இந்தப் படம் கவர்ந்ததோடு, உலகம் முழுக்க பெரும் வரவேற்பு கிடைத்தது. 

`இந்தப் படம் பாகிஸ்தானில் வெளியாக வேண்டுமானால், இந்திய தேசிய கீதம் ஒலிக்கும் காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட வேண்டும்' என பாகிஸ்தான் கூறியது. ''அப்படி, இந்திய தேசிய கீதத்தை நீக்கிவிட்டு பாகிஸ்தானில் எனது படத்தைத் திரையிடவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இந்திய தேசிய கீதத்துடன்தான் பாகிஸ்தானில் ' டங்கல்' படம் ரிலீஸ் ஆகும். இல்லையென்றால், பாகிஸ்தானில் `டங்கல்' படம் வெளியாகாது '' என அமீர் கான் பதிலடி கொடுத்திருந்தார். 

பாகிஸ்தானுக்கு  அமீர் கான் கொடுத்த பதிலடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தைக் கவர்ந்து பழைய கோபத்தை மறக்கச் செய்துவிட்டதுபோலும். மும்பையில் நடந்த விழாவில், அமீர் கானுக்கு 'விசேஷ் புஷ்கார்' விருதை தன் கரங்களால் வழங்கியுள்ளார் மோகன் பகவத். வழக்கமாக எந்தத் தனியார் அமைப்புகள் விருது வழங்கினாலும் அதைப் பெற அமீர் கான் முன்வருவதில்லை, ஆனால் தன் கொள்கையைக் கொஞ்சம் ஒத்திவைத்துவிட்டு மோகன் பகவத்துடன் விருது மேடையில் தோன்றியிருக்கிறார் அமீர் கான்.

விழாவில் பேசிய அமீர் கான், ''கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் என்னை வைத்துப் படம் எடுத்த இயக்குநர்களும் கதாசிரியர்களும்தான். அவர்களது அற்புதமான உழைப்பினால்தான், என்னால் இத்தகைய சாதனைகளைப் படைக்க முடிந்தது. எனது வெற்றிக்குக் காரணமான இயக்குநர்களுக்கும் கதாசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!