வெளியிடப்பட்ட நேரம்: 19:16 (26/04/2017)

கடைசி தொடர்பு:19:15 (26/04/2017)

டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் நாளை சென்னை வருகை!

டி.டி.வி.தினகரனை ஐந்து நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லியின்  திஸ் ஹசாரி நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் நாளை சென்னை வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் டி.டி.வி.தினகரனை டெல்லி போலீஸ், சென்னை அழைத்து வரலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. 

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் அளிக்க முயற்சி செய்ததாக டி.டி.வி.தினகரன் மற்றும் அவரின் நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் நேற்று கைது செய்தது. 

நான்கு நாள்கள் நடைபெற்ற விசாரணையின் முடிவில் தினகரன் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததை ஒப்புக்கொண்டார் என்று டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். இதையடுத்து, இன்று டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் மற்றும் அவரின் நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி டெல்லி காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பூனம் சவுத்திரி, டெல்லி காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று தினகரனை ஐந்து நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். கைது நடவடிக்கையை அடுத்து, ஜாமீன் கேட்டு தினகரன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

வழக்கு விசாரணையில் டெல்லி போலீஸின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் வேகம் பிடித்துள்ளன.