குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம்... 'உடான்' திட்டம் உடான்ஸ் திட்டமா?

உடான்

இனி, வெறும் 2,500 ரூபாயில் ஒரு மணி நேர விமானப் பயணத்தின் மூலம் 500 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கலாம்.  `என்ன உடான்ஸ் விடுறீங்களா... இல்லை ஏதாவது விமான கம்பெனிக்கு விளம்பரம் பண்றீங்களா?' என்று கேட்காதீர்கள் மக்களே! இது உடான்ஸ் அல்ல,  பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்த 'உடான்' திட்டம்.

`இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்க முடிவுசெய்துள்ளது மத்திய அரசு. அதற்காக `உடான்' திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளார் பிரதமர் மோடி. இந்தத் திட்டத்தின் முதல் விமான சேவையாக சிம்லா - டெல்லி , கடப்பா - ஹைதராபாத், நந்தீத்  - ஹைதராபாத் ஆகிய வழித்தடங்களுக்கான விமான சேவையை பிரதமர் கொடி அசைத்துத் தொடக்கிவைப்பார்' என்று பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்தது. அதன்படி பிரதமர் மோடி இன்று சிம்லாவிலிருந்து இந்தப் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். `உலக அளவில் முதன்முதலாக இந்தியாவில்தான் இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது' என பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது. மோடி, பிரதமராகப் பெறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டுகளில் சிம்லாவுக்குச் செல்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டம் கடந்த வருடம் ஜூன் மாதம் திட்டமிடப்பட்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. தற்போதுதான் இந்தத் திட்டத்தின் முதல் விமான சேவை தொடங்குகிறது. இந்தத் திட்டத்தில் தற்போது வரை ஐந்து விமான நிறுவனங்கள் இணைந்துள்ளன. அவை,
ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், ஏர் டெக்கான், ஏர் ஒடிசா மற்றும் டர்போ மெகா ஏர்வேஸ். இந்த நிறுவனங்கள், 70 விமானநிலையங்களை இணைக்கும் வகையில் தங்களது சேவையை அளிக்க முடிவுசெய்துள்ளன. இதன்மூலம் 22 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்கள் பயனடைய உள்ளன.

``இந்த `உடான்' திட்டத்தில் விமான சேவை வழங்கும் விமானங்களுக்கு, விமானநிலையக் கட்டணம் மூன்று வருடங்களுக்கு இல்லை. மேலும், பல சலுகைகளையும் அளிக்க உள்ளது'' என இந்திய KPMG ரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் துணைத் தலைவர் அம்பர் துபே தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஒருவர் 2,500 ரூபாய்க்குக் கிட்டத்தட்ட ஒரு மணி நேர விமானப் பயணத்தில் 500 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம்  அல்லது ஹெலிகாப்டரில் அரை மணி நேரம் பயணம் செய்யலாம். இந்தத் திட்டன் அடிப்படையில் இயங்கும் விமானங்களில் இருக்கை எண்ணிக்கைகள் 19 முதல் 78 வரை இருக்கும்.

சென்னையிலிருந்து கோயம்புத்தூர் செல்ல பண்டிகைக் காலங்களில் பேருந்துகள் வசூலிக்கும் கட்டணமே 2,000 ரூபாய்க்குமேல் இருக்கிறது. பேருந்துக் கட்டணத்தைக் காட்டிலும் விமானக் கட்டணம் குறைவாக இருந்தால், எல்லோரும் விமானத்திலேயே பயணிப்பார்கள். இந்த `உடான்' திட்டம் எல்லா நகரங்களையும் இணைக்கும் வகையில் வளர்ச்சியடைந்தால், பயணிகளுக்கு நிச்சயம் இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!