''பா.ஜ.க முன் மண்டியிட்டு நடுங்குகிறது அ.தி.மு.க..!'’ - பாலபாரதி விளாசல்

பாலபாரதி

 

ண்ணீர் தட்டுப்பாட்டாலும், கடுமையான வறட்சியாலும் தமிழக மக்களின் வாழ்க்கை மிக அபாயகரமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டிய ஆளுங்கட்சி, தினம் ஒரு ரெய்டு, அதிகாரப் போட்டி போன்ற சொந்தப் பிரச்னையில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசியல் சூழலை இடதுசாரிகள் எப்படிப் பார்க்கின்றனர்? 

''மத்திய அரசின் அரசியல் சூழ்ச்சியால் தமிழகம் சின்னாபின்னமாகி சீரழிந்து வருகிறது'' என்று ஆவேசமாக ஆரம்பிக்கிறார் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி. 

எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்

 

'‘140 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போன்ற கடுமையான வறட்சி தற்போது தமிழகத்தில் நிலவுகிறது. இந்த வறட்சியைச் சமாளிக்க மக்களுக்கு ஆளும்கட்சியின் மிகப்பெரிய ஆதரவும் நடவடிக்கையும் அவசியம். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க. இரண்டாக, மூன்றாகச் சிதறியுள்ளது. எல்லோரும் பதவியை குறிக்கோளாக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பி.எஸ். முதல்வராகவும், சசிகலா பொதுச்செயலாளராகவும் இருந்திருக்கலாம். தானே முதல்வராக வேண்டும் என்கிற சசிகலாவின் ஆசை, முதல் விரிசலை ஆரம்பித்து வைத்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அவரைச் சிறைக்கு அனுப்பியது. இந்தச் சூழலை மத்திய அரசு மிகச் சரியாகப் பயன்படுத்தி தனது அரசியல் சதிராட்டத்தை நடத்த ஆரம்பித்துவிட்டது. மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், தனது தந்திரங்களால் மாநில அரசை அடித்து, காலி செய்துவருகிறது. பா.ஜ.க. இருட்டில் நடத்தும் இந்த நிகழ்வுகள் சாதாரண மக்களுக்குப் புரியவில்லை. தொலைப்பேசித் தகவலை வைத்து தினகரனை நான்கு நாட்கள் விசாரிக்கின்றனர். இதில் தேர்தல் ஆணையத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி எங்கே போனார்? அவர்தானே புகார் கொடுத்திருக்க வேண்டும்? ஆனால், தினகரன் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர்களை மிரட்டுவதற்காக ரெய்டு அஸ்திரம். சாதாரண மக்கள் மனதில் ரெய்டு நல்ல விஷயம்தானே என்று தோன்றும். இதன் மூலம் தங்கள் தந்திரங்களை, சூழ்ச்சிகளை ஒவ்வொன்றாகக் கட்டவிழ்த்து மிரட்டுகிறது மத்திய ஆளும் அரசு. எங்கே நம் வீட்டுக்கும் ரெய்டு வந்துவிடுமோ எனப் பயந்து ஓ.பி.எஸ்.ஸும் எடப்பாடியும் பா.ஜ.க முன்பு சரண்டராகிவிட்டனர். ஒருவேளை கட்சி ஒன்றிணைந்து, சின்னம் மீட்கப்பட்டாலும் இந்தச் சுயநலக்காரர்களால் மக்களுக்கு எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. மக்களும் இவர்களுக்கு வாக்குகளை அளிக்கப் போவதில்லை. 

மக்கள் குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லாமல் பல கிலோமீட்டர்கள் நடந்துசென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். மாநில பிரதிநிதிகளோ எங்கு டாஸ்மாக் கடை வைக்கலாம் என இடம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதை எதிர்த்தால், பெண்கள் என்றும் பார்க்காமல் அடித்து, ஒடுக்கப்படுகின்றனர். விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்த அய்யாக்கண்ணு நாற்பது நாட்களாக அனைத்து வழிகளிலும் போராடிப் பார்த்தார். அவரை நேரில் சந்திக்க மோடிக்கு நேரமில்லை. மத்திய அரசுக்கு ஒட்டுமொத்த தமிழர்களையும் புறக்கணிக்கும் நிலைப்பாடுதான் மேலோங்கி உள்ளது. விவசாயிகளோடு மாநில அமைச்சர்கள் உட்கார்ந்திருந்தாலும் இந்நேரம் மோடி சந்தித்திருப்பார் இல்லையா? கடைசி நேரத்தில் வேறு வேலையாகப் போன முதல்வர் எடப்பாடி அய்யாக்கண்ணுவைப் பார்த்துவிட்டு வருகிறார். இதன் மூலம் தமிழக அமைச்சர்களுக்கும் மக்கள் மீது எந்த அக்கரையும் இல்லை என தெளிவாகிறது. விவசாயிகளுக்காக தி.மு.க., இடது சாரிகள் இணைந்து மத்திய அரசுக்கு அறைகூவல் விடுத்து பந்த் அறிவித்தது. இதற்கு மக்களும் ஆதரவளித்து வெற்றிபெறச் செய்துள்ளனர். ஆனால், தமிழிசை செளந்தரராஜனோ இந்த பந்தை கேலி செய்கிறார். பந்த் வெற்றி பா.ஜ.க.வுக்கு கிடைத்த பலத்த அடியாகப் பார்க்கிறேன். மக்களின் போராட்டம் எதற்கும் அடிபணியாமல் வெடித்துள்ளது. நெடுவாசல் போராட்டம் போல தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து பல துரோகங்களை செய்துவரும் மத்திய அரசுக்கு எதிராகவும் ஒன்று திரண்டு போராடினால்தான் நல்ல வழி கிடைக்கும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். அவர்கள் ஆளும் மாநில அரசையோ, மத்திய அரசையோ இனியும் நம்பி ஏமாறப்போவதில்லை. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களைத் திரட்டி, மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்’' என்கிறார் ஆவேசம் குறையாத குரலில். 

- ஆர்.ஜெயலெட்சுமி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!