'காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் பேச்சே இல்லை': மத்திய அரசு திட்டவட்டம்

Mukul Rohatgi

ஜம்மு- காஷ்மீரில், வன்முறையின்போது ராணுவம் பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துவதை தடை விதிக்கக் கோரி, ஜம்மு- காஷ்மீர் பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் சார்பில், அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, பெல்லட் குண்டுகளுக்குப் பதிலாக, வேறு வித ஆயுதங்களை பயன்படுத்துவதற்குக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு வருவதில்லை என்று பார் கவுன்சில் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. பின், மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, "இது தொடர்பாக ஜம்மு- காஷ்மீரில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுடன் பேசத் தயாராக உள்ளோம். ஆனால், பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை செய்ய முடியாது" என்று வாதம் செய்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், "இதில் பார் கவுன்சிலுக்கும் முக்கியப் பொறுப்பு உள்ளது. இந்த வன்முறை பிரச்னையை தீர்க்க, பார் கவுன்சில் சில பரிந்துரைகளுடன் வர வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பின் பார்கவுன்சில் பரிந்துரை செய்ய வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை மே 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!