என்.எஃப்.டி.சி தயாரிக்கும் பிற மாநில மொழி திரைப்படங்களுக்கு ஹிந்தி சப்டைட்டில்கள் கட்டாயம்...!

தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தால் தயாரிக்கப்படும் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு கட்டாயம் ஹிந்தி மொழியில் சப்டைட்டில்கள் அல்லது டப்பிங் செய்யவேண்டும் என்ற நாடாளுமன்ற குழுவின் பரிந்துறைக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

theatre

தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறையின் கீழ் இயங்கும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்துக்கு (என்.எஃப்.டி.சி) இத்தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் தயாரிக்கும் படங்களில் கட்டாயம் ஹிந்தி சப்டைட்டில்கள் இடம்பெற வேண்டும் அல்லது ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருகிறது. மேலும் என்.எஃப்.டி.சி நடத்தும் திரைப்பட விழாக்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஹிந்தி மொழி ரசிகர்களுக்கு மற்ற மாநில மொழி திரைப்படங்கள் எளிதில் புரிவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக மொழிகளுக்கான பாராளுமன்ற குழுவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த பரிந்துறையை பாராளுமன்றக் குழு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்தது. தற்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனிடையே என்.எஃப்.டி.சியின் டப்பிங் பணிகள் தற்போது முழுமையாக செயல்படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. முறையான ஆணை வந்த பின்பு இதுகுறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என என்.எஃப்.டி.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!