வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (01/05/2017)

கடைசி தொடர்பு:15:08 (01/05/2017)

மகாராஷ்டிராவின் 57-வது ஆண்டுவிழா! மும்பையில் கோலாகல கொண்டாட்டம்!

மகாராஷ்டிரா மாநிலம் தோன்றி 57 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இன்று மும்பையில் கோலகலத் திருவிழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

மஹாராஷ்டிரா

இந்திய நாட்டின் மத்தியில் அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலம் 1960-ம் ஆண்டு மே 1-ம் தேதி உருவானது. இந்நாளின் சிறப்பினைக் கொண்டாடும் வகையில் இன்று மும்பை தாதர் பகுதியில் அரசு விழா சிறப்பாக நடந்தேறியது. மும்பை போலீஸார், மாநில போலீஸ் படை, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்ட சிறப்பு அணிவகுப்பு, கலை விழாக்கள் என நடந்தது.

இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் மராத்திய வரலாற்றினை பறைசாற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகள், பாரம்பர்ய நடனம், மராத்தியப் பெருமைகள் என பல்வேறு விதத்தில் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு சார்பிலேயே அனைத்து இடங்களிலும் இவ்விழா நடைபெறுகிறது. இத்திருவிழா நாளினை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

மும்பையில் சிவாஜி பூங்காவில் நடந்த விழாவில் மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் விழா கொண்டாடப்பட்டது. 1960-ம் ஆண்டு வரை பம்பாய் மாகாணமாக இருந்தது. ’பம்பாய் மறுசீரமைப்புச் சட்டம்’ அடிப்படையில் மகாராஷ்டிரமாகவும், குஜராத் மாநிலமாகவும் பிரிக்கப்பட்டது. இந்திய வரலாற்றினைப் புரட்டிப் பார்த்தால் மராட்டியப் பங்களிப்பு இல்லாத காலமே இல்லை என்றே சொல்லலாம். மெளரியர்கள், சாலுக்கியர்கள், குப்தர்கள் என யார் ஆட்சி செய்தபோதிலும் மராட்டியத்தை விடுத்து இந்திய வரலாற்றினை நிறைவு செய்ய இயலாது என்பதே நிதர்சனமான உண்மை.