வெளியிடப்பட்ட நேரம்: 18:58 (02/05/2017)

கடைசி தொடர்பு:18:59 (02/05/2017)

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு : அமலாக்கத்துறை மேல்முறையீடு!

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. கறுப்புப் பணம் பற்றி சிபிஐ நீதிமன்றத்தில் சரியாக பரிசீலிக்கப்படவில்லை என்று அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. 

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி, அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

இதையடுத்து, சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்த வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.