வெளியிடப்பட்ட நேரம்: 12:18 (03/05/2017)

கடைசி தொடர்பு:12:32 (03/05/2017)

கேதார்நாத் கோயிலில் தரிசனம்; பதஞ்சலி நிறுவனத் திறப்பு விழா- மோடியின் இன்றைய நாள்!

ஆறு மாதத்துக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்ட கேதார்நாத் கோயிலில், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி சுவாமி தரிசனம்செய்தார். இன்று மாலை பதஞ்சலி நிறுவனத்தின் திறப்புவிழாவில் கலந்துகொள்ளும் மோடி, இன்றைய நாள் முழுவதும் உத்தரகாண்ட் மாநிலத்திலேயே சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

கேதார்நாத்தில் மோடி

குளிர்காலங்களில் நடை சாத்தப்பட்டிருக்கும் உத்தரகாண்ட் கேதார்நாத் கோயில், ஆறு மாதத்துக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டது. விசேஷ நாளாகக் கருதப்படும் இந்த தினத்தில், பிரதமர் நரேந்திர மோடி முதல் ஆளாக இன்று சுவாமி தரிசனம்செய்தார். தன்னுடைய உத்தரகாண்ட் சுற்றுப்பயணத்தை கேதார்நாத்திலிருந்து தொடங்கப்போவதாக ட்விட்டர் பக்கத்தில் மோடி நேற்றே அறிவித்திருந்தார்.  அதன்படி, இன்று காலை உத்தரகாண்ட் முதல்வரின் வரவேற்புடன் மோடியின் பயணம் தொடங்கியது.

கேதார்நாத் கோயிலின் மிகச் சிறிய அளவிலான கோயிலின் பிரதி ஒன்றை, கோயிலுக்குப் பரிசளித்துள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி ஆய்வு நிறுவனத்தைத் திறந்துவைக்க இருக்கிறார். நேற்றே, இதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் செய்துள்ளார்.