தேசிய விருது வழங்கும் விழா: வைரமுத்து, இயக்குநர் ராஜுமுருகன் விருது பெற்றனர்..! | Director Rajumurugan, Vairamuthu receives National award from President

வெளியிடப்பட்ட நேரம்: 19:43 (03/05/2017)

கடைசி தொடர்பு:19:49 (03/05/2017)

தேசிய விருது வழங்கும் விழா: வைரமுத்து, இயக்குநர் ராஜுமுருகன் விருது பெற்றனர்..!

டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கவிஞர் வைரமுத்து, இயக்குநர் ராஜுமுருகன் ஆகியோர் குடியரசுத் தலைவரிடம் விருதுகளைப் பெற்றனர்.

national award

64-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில், 2016-ம் ஆண்டில் விருதுகளை வென்றவர்களுக்கும் திரையுலக சாதனையாளர்களுக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கவுரவித்தார். அவருடன் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ரதோர் ஆகியோர் பங்கேற்றனர். சிறந்த திரைப்படத்துக்கான விருதை 'ஜோக்கர்' படம் பெற்றது. அதன் இயக்குநர் ராஜுமுருகன் குடியரசுத் தலைவரிடம் இருந்து தேசிய விருதை பெற்றுக்கொண்டார். ராஜுமுருகன் வேட்டி, சட்டையில் வந்து விருதை பெற்றது பலரையும் கவனிக்க வைத்தது. தர்மதுரை திரைப்படத்தில் இடம் பெற்ற 'எந்த பக்கம்' என்ற பாடலுக்காக சிறந்த பாடலாசிரியர் விருதைப் பெற்றார் வைரமுத்து. இவர் தேசிய விருது பெறுவது இது 7-வது முறையாகும். தொடர்ந்து சிறந்த பாடகருக்கான தேசிய விருதை சுந்தர் ஐயர் பெற்றார். 'ஜோக்கர்' படத்தில் 'ஜாஸ்மீனு...' என்ற பாடல் பாடியதற்காக பாடகர் சுந்தர் ஐயருக்கு விருது வழங்கப்பட்டது. தெலுங்கு படமான 'ஜனதா கேரேஜ்' திரைப்படத்தில் சிறந்த நடனம் அமைத்ததற்காக நடன இயக்குநர் ராஜுசுந்தரம் தேசிய விருது பெற்றார். மேலும் தனஞ்செயன், ஒளிப்பதிவாளர் திரு ஆகியோரும் தேசிய விருதுகளைப் பெற்றனர்.

'புலிமுருகன்' படத்துக்காக ஸ்டன்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் விருதைப் பெற்றார். 'ரஸ்டம்' படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதை அக்‌ஷய் குமாரும், 'நீர்ஜா' படத்துக்காக சிறந்த நடிகைக்கான சோனம் கபூரும் விருதைப் பெற்றனர். சிறப்பு விருதை மலையாள நடிகர் மோகன் லால் பெற்றார்.