வெளியிடப்பட்ட நேரம்: 09:33 (04/05/2017)

கடைசி தொடர்பு:09:32 (04/05/2017)

நீதிபதி கர்ணனும் உச்சநீதிமன்ற விவகாரமும்... என்ன சொல்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்?

நீதிபதி கர்ணன்

நீதிபதி கர்ணனுக்கும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இடையே நிகழ்ந்து வரும் மோதல் போக்கு 'சபாஷ் சரியான போட்டி' என்ற திரைப்பட வசனத்தையும் மிஞ்சிவிடும் நிலையில் இருக்கிறது. ஒரு பக்கம் கர்ணனுக்கு மன நல மருத்துவப் பரிசோதனை  நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது. 'உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குத்தான் மனநலப் பரிசோதனை செய்யவேண்டும்' என்று கர்ணனும் சளைக்காமல் பதிலடிகொடுத்து வருகிறார்.

சென்னை  உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றி வந்த கர்ணனை கடந்த ஆண்டு கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்த உத்தரவுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்ததோடு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்தப் புகார் கடிதம் ஒன்றையும் பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு எழுதினார் கர்ணன். அந்த கடிதத்தில்  நீதிபதிகளின்  ஊழல் குறித்து எழுதியிருந்ததாக சொல்லப்படுகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு பதிலடியா? 

கர்ணனின் இந்த நடவடிக்கையை அவமதிப்பாக கருதிய உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதுமட்டுமின்றி இந்த வழக்கில் கர்ணனை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியும் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து கடந்த  மார்ச் 31 -ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் கர்ணன். அப்போது உச்சநீதிமன்றம் அவருடைய விளக்கத்துக்கு 4 வார  காலம் அவகாசம் கொடுத்ததோடு, 'நீதிமன்றப் பணிகளில் கர்ணன் ஈடுபடக் கூடாது' என்று ஏற்கெனவே விதித்த உத்தரவையும் திரும்பப் பெற மறுத்துவிட்டது. 

உச்சநீதிமன்றம்

மேலும், நீதிபதி கர்ணனுக்கு  மன நலப் பரிசோதனை நடத்தி, அந்த அறிக்கையை வரும்  8 -ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 'உச்சநீதிமன்ற  நீதிபதிகளுக்கு மனநல மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும்' என பதில் உத்தரவு பிறப்பித்தார்  நீதிபதி கர்ணன். மேலும், '7 நீதிபதிகளும் எனக்கு முன்னால் கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து 7 நீதிபதிகளும் ஆஜராகாததால் 7 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார் நீதிபதி கர்ணன். 

பதிலுக்குப் பதிலாக இப்படி அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது குறித்து சட்டத்துறை வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்? என்று ஹரி பரந்தாமன்அறிந்துகொள்வதற்காக முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமனிடம் பேசினோம்.. "கர்ணன் மீது அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய அவசியமில்லை. இதுதான் பிரச்னை தொடங்க காரணமாக இருக்கிறது.

கர்ணன் மீது அவமதிப்பு தேவையில்லை 

சென்னை  உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் கர்ணன். அவரை கொல்கத்தா நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்கின்றனர். என்னைப் பொருத்தவரை வேலை நீக்கத்தைவிட இடமாற்றம் என்பது மிகவும் கொடுமையானது அந்த ஆதங்கத்தில் கடிதம் எழுதினார். 

நீதிபதிகள் குறித்து கர்ணன்  புகார் கொடுத்தால்  மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவிடுமா என்ன? தேவையில்லாமல் கர்ணனுடைய  கடிதத்தை பெரிதாக்கி அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்தனர் அதற்கான அவசியமே இங்கு இல்லை அடுத்த மாதம் அவர் ஓய்வு பெற உள்ளார் அதனால் இந்த விவகாரத்தை அப்படியே விட்டிருக்கலாம். இது ஒரு விதமான ஈகோ மோதலாக தற்போது போய்க் கொண்டிருக்கிறது. இந்த மோதலை ஆரம்பித்து வைத்த உச்சநீதிமன்றத்துக்கு இதை எப்படி முடிப்பது என்று தெரியவில்லை.அதே நேரத்தில் இதனை எதிர்கொள்ளும் கர்ணனுக்கும் இதனை எவ்வாறு  அணுக வேண்டும் என்று தெரியவில்லை தனிப்பட்ட முறையில் அவர் எழுதிய புகார் மனுவுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய அவசியமில்லை. அதனால் இந்த விவகாரம் எங்கே போய் முடியும் என்பது தெரியவில்லை. இந்த விவகாரத்தால் நீதிமன்றத்துக்குத்தான் பாதிப்பு  அதிகம்" என்றார். 

சந்துருகர்ணன் நடவடிக்கை சரியல்ல..

இது தொடர்பாக பேசிய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி  சந்துரு, " கர்ணனுடைய நடவடிக்கை முற்றிலும் தவறானது. கர்ணன் மீது புகார் வந்தபோதே அதனை விசாரிக்க  உள்துறை  விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். அந்த நடவடிக்கையை எடுக்கத் தவறியதே இப்போது இதுபோன்ற கேலிக்கூத்துகள் நடைபெறக் காரணம். லெட்டர் பேடை வைத்துக் கொண்டு நீதிபதிகள் மீது கண்டபடி அறிக்கை விடும் கர்ணனின் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை விரைவில் ஓய்வுப் பெற போகும் காரணத்தால்தான் நீதிமன்றத்தின்  உத்தரவை மதிக்காமல் கர்ணன் இவ்வாறு பேசி வருகிறாரோ என்று தோன்றுகிறது. இதனால் அவர் மீது சட்டரீதியிலான  நடவடிக்கைகள் மேலும் இறுக வாய்ப்பு அதிகரித்துவிட்டது" என்றார்.  

லட்சக்கணக்கான  வழக்குகள் தேங்கி கிடக்கின்றன நீதிபதிகளே...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்