கறுப்புப்பண ஊடுருவலில் இந்தியாவுக்கு முதலிடம்! : அதிர்ச்சி ரிப்போர்ட்

கறுப்புப்பணம்

வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணத்தை எப்படியாவது மீட்டுக்கொண்டு வந்தே தீருவோம் என்கிற தொனியில் மோடி தலைமையிலான அரசு ஒவ்வொரு முறையும் பேசி வருகிறது. அதற்கான முயற்சியையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்துவருகிறது. அதன் முதல்படியாக பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தது. இதனால், அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும், கறுப்புப் பணம் எப்படியாவது கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவுக்கு ஒரு விடிவு காலம் பிறக்காதா என்ற எண்ணத்தில் மக்கள் அனைவரும் சிரமம் பார்க்காமல் அதை ஏற்றுக்கொண்டனர். இதற்காகப் பல ஏழை உயிர்கள் காவு வாங்கப்பட்டன. இந்தநிலையில் அமெரிக்க ஏஜென்சி நிறுவனம் ஒன்று இந்தியாவில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 770 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான கறுப்புப் பணம் ஊடுருவியுள்ளதாக அறிவித்துள்ளது. 

உலகப் பொருளாதாரத்தைக் கண்காணித்துவரும் நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் ஃபைனான்சியல் இன்டகிரிடி என்ற நிறுவனம்தான் இந்தக் கறுப்புப் பண தகவல்களை வெளியிட்டுள்ளது. வளரும் நாடுகளில் சட்டவிரோதமாக வெளியேறும் மற்றும் ஊடுருவும் பணம் பற்றிய ஆய்வை அண்மையில் நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில்தான் இந்தியாவில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில்... அதாவது, 2005-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டுவரை சுமார் 770 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான கறுப்புப் பணம் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளது. இந்தப் பெரும்தொகையானது இந்திய மொத்த வர்த்தகத்தில் சுமார் 14 சதவிகிதத்துக்கும் மேல். இதே காலகட்டத்தில் 165 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்தியப் பணம் வெளிநாடுகளுக்கு ஊடுருவியுள்ளது. இந்திய மொத்த வர்த்தகத்தில் மூன்று சதவிகிதம் ஆகும்.

 

கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் 101 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான கறுப்புப்பணம் ஊடுருவி இருப்பதாகவும், சுமார் 23 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான கறுப்புப்பணம் இந்தியாவிலிருந்து வெவ்வேறு நாடுகளுக்கு வெளியேறி இருப்பதாகவும் ஆய்வின் முடிவில் அறிவித்துள்ளனர். இந்த 2014-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் உள்ள வளர்ந்துவரும் வெவ்வேறு நாடுகளிலிருந்து சுமார் ஒரு டிரில்லியன் டாலர் கறுப்புப் பணம் ஊடுருவல் நடைபெற்றுள்ளது. இதில் வியக்கவைக்கும் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அதாவது, குளோபல் ஃபைனான்சியல் இன்டகிரிடி நிறுவனம் கணக்கெடுத்த... வளர்ந்துவரும் நிலையில் உள்ள நாடுகளில் கறுப்புப் பண ஊடுருவல் இந்தியாவில்தான் அதிகமாம்.

இதுகுறித்து பொருளாதார வல்லுநர்கள், ''சமீபத்தில் சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணம் பதுக்கிவைத்திருப்பவர்களின் பட்டியல் கசிந்தது. 'இந்தப் பட்டியலைக்கொண்டு விசாரணை தீவிரப்படுத்தப்படும்' என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் பெரும் பரப்பரப்பும் உண்டாகியது. ஆனால், இன்றுவரை அதற்கான விசாரணை உண்மையில் நடந்துவருகிறதா என்பதும் கேள்விக்குறியே? அவ்வளவு ஏன்? பல ஆயிரம் கோடிகளை வங்கியில் கடனாகப் பெற்றுக்கொண்டு மோசடி செய்தவரை கைது என்ற பெயரில் கைதுசெய்து... பின் விடுவிக்கப்பட்ட ஒரு போலி நாடகம் நடந்தேறியதை அனைவருமே அறிவர். ஆனால், எதற்கெடுத்தாலும் ''கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கிவைத்தவர்களை விரைவில் கண்டறிவோம். அந்தப் பணத்தை மொத்தமாக மீட்டு இந்திய மக்களுக்காகப் பயன்படுத்துவோம்'' என்று மோடி கூறிவருகிறார். இப்போது இந்திய கறுப்புப் பணத்தைப் பற்றி வெளிநாடு நிறுவனம் ஒன்று கண்டறிந்து கூறியுள்ளது. இந்த ஆய்வானது கறுப்புப் பணம் ஊடுருவல் பற்றிய இந்தியாவின் வேலையைப் பாதியாகக் குறைத்துள்ளது. இந்தச் சமயத்தில், இந்திய அரசு செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அந்தக் கறுப்புப் பணத்தைப் பத்திரமாக மீட்டுக் கொண்டுவருவது மட்டும்தான். அப்படி மீட்டுக்கொண்டு வரும் பணத்தை ஏழை மக்களின் நலன்களுக்குக்கூடப் பயன்படுத்த வேண்டாம். கார்ப்பரேட் முதலைகளுக்கு இனாமாகவோ அல்லது கடனாகவோ கொடுக்காமல் இருந்தால் சரி'' என்கின்றனர்.

இந்திய பணம்

உண்மையில், மத்திய அரசு இந்தக் கறுப்புப் பண ஊடுருவல் செய்தவர்களைக் கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து அந்தப் பணத்தை மீட்கிறதா? அல்லது எப்போதும்போல 'வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை விரைவில் மீட்டெடுப்போம்' என்ற பழைய டெம்ப்ளேட்டையே  சொல்லப்போகிறதா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!