நிர்பயா வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!

மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட வழக்கில், இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வர உள்ளது. ஏற்கெனவே, டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. 

டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம், இரவில் தன் ஆண் நண்பருடன் நின்ற மருத்துவ மாணவி நிர்பயாவை ஆறு பேர் சேர்ந்த  கும்பல் பாலியல் பலாத்காரம்செய்து, அவரைக் கடுமையாகத் தாக்கி, வீசி எறிந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிர்பயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக ராம்சிங், அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் மற்றும் 18 வயதான சிறுவன் ஒருவன் என ஆறு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

இளம் குற்றவாளியான சிறுவன், சீர்திருத்தக் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டான். மற்ற ஐந்து பேருக்கும் டெல்லி பெருநகர நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. குற்றவாளிகள், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், முக்கியக் குற்றவாளியான ராம்சிங், 2014–ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் தூக்குப்போட்டுத் தற்கொலைசெய்துகொண்டார். அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய நான்கு பேரும் தூக்குத் தண்டனைக் கைதிகள்.

இதை எதிர்த்து, நான்கு பேரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்தனர். அந்த மனுவைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிசெய்தது. அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளிக்க உள்ளது. இன்று மதியம் 2 மணி அளவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!