மெக்டொனால்டு,கே.எஃப்.சி-க்கு போட்டியாகக் களமிறங்கும் பாபா ராம்தேவின் பதஞ்சலி!

பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ தயாரிப்புகள் உணவு, அழகுசாதனப் பொருள்கள், சமையல் பொருள்கள் என, நுகர்வோரின் அத்தனை கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்புவதில் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டிபோட்டுவருகிறது. இந்த வரிசையில், தற்போது பன்னாட்டு உணவு நிலையங்களான மெக்டொனால்டு, கே.எஃப்.சி, சப்வே போன்ற துரித உணவு நிலையங்களுக்கும் போட்டியாகக் களமிறங்க முடிவுசெய்துள்ளது.

பாபா ராம்தேவ்

உத்தரகாண்ட் மாநிலத்தைத் தலைமையிடமாகக்கொண்டு, பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் இயங்கிவருகிறது. நேற்று, 'பதஞ்சலி சார்பில் உணவு நிறுவனங்கள் விரைவில் நாடு முழுவதும் தொடங்கப்படும்' என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ’முற்றிலும் ஆயுர்வேதத் தயாரிப்புகளால், இயற்கை முறையில் உடல்நலத்துக்கு ஏற்ற ரெஸ்டாரன்ட்டுகள் திறக்கப்படும்’ என பாபா ராம்தேவ் நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்திய உணவு நிலையச் சந்தையில், டாமினோஸ் போன்ற பெரிய நிறுவனமே போட்டிகளைச் சமாளிக்க முடியாமல் தத்தளித்து வரும் காலத்தில், பதஞ்சலி ரெஸ்டாரன்ட்டுகள் இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்குமா என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் எழுப்பியபோது, ’கடந்த நிதியாண்டில், பதஞ்சலி நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 10,500 கோடி ரூபாய். மேலும், 300 பில்லியன் கோடி ரூபாய்க்கு அடுத்த ஆண்டுக்கான புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்த முடிவுசெய்துள்ளோம். அதனால், புதிய முதலீட்டுக்கான அத்தனை தகுதியும் உள்ளது. கூடுதலாக, ராணுவத்தில் வீரமரணம் அடையும் வீரர்களின் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றும் செயல்படுத்த உள்ளோம்’, என்றார்.

சில நாள்களுக்கு முன்னர், ’இன்னும் ஐந்து ஆண்டுகளில்... இந்தியச் சந்தைகளில் இருந்து பன்னாட்டு நிறுவனங்களை நாட்டை விட்டே பதஞ்சலி வெளியேற்றும்’ என பாபா ராம்தேவ் சவால் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!